[X] Close

மேகேதாட்டு அணை: கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


tamil-nadu-cm-requests-modi-to-reject-karnataka-s-mekedatu-dam-project-report

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 16:47 pm
  • அ+ அ-

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு சமர்ப்பிடித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை வழங்கிய அனுமதியை திரும்ப பெற உத்தரவிடுமாறு 27.11.2018 மற்றும் 6.12.2018 ஆகிய தேதிகளில் நான் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துகிறேன். இது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும்.

மத்திய அரசு, மத்திய நீர்வளத்துறை, கங்கா சீரமைப்பு திட்டம், மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றிடம்  17.9.2018 மற்றும் 31.10.2018 ஆகிய தேதிகளில் தமிழக அரசு, கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் முன்பு ஜனவரி 18 ஆம் தேதி அளித்ததாக 21.1.2019 அன்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேகேதாட்டு திட்டத்திற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும்.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் 30.11.2018 அன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. எனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மேகேதாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

எனவே, இதில் தாங்கள் தலையிட்டு கர்நாடகா தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என, மத்திய நீர்வளத்துறை, கங்கா சீரமைப்பு திட்டம், மத்திய நீர்வள ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close