[X] Close

ஓபிஎஸ் யாகம் வதந்தி; பாத்தது யாரு? - அமைச்சர் கேள்வி


ops-yaagam

அமைச்சர் ஜெயகுமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Jan, 2019 13:36 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், யாகம் நடத்தியுள்ளார் என்று சொல்லப்படுவது வதந்திதான். அப்படி யாகம் நடந்ததைப் பார்த்தவர்கள் யார் என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தினார் என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உள்ள கட்சித்தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததாவது:

தலைமைச் செயலகத்தில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ். யாகம் நடத்தியிருக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் சொல்லிவருகிறார்கள். இது வதந்திதான். உண்மையில்லை. யாகம் நடத்தப்பட்டதை யாராவது பார்த்தார்களா?

கட்சியைப் பிளவுபடுத்த, ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து சதிசெய்கிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கவேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

காலையில் எழுந்தவுடன் அதிமுக ஆட்சிக்கு எதிராக இன்று என்ன செய்யலாம் என்றுதான் ஸ்டாலினும் தினகரனும் யோசித்து, செயல்பட்டு வருகிறார்கள். எங்களின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது.

எடுபிடி, துதிபாடுதல், அடிமைசாசனம் என்றெல்லாம் அதிமுக ஒருபோதும் இருந்ததே கிடையாது. பாஜக அதிமுகவை அடிமையாக்கிவிட்டது என்று தம்பிதுரை எம்.பி. சொல்லவில்லை. அடிமையாக்க நினைக்கிறது என்றுதான் சொன்னார்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள். அதிமுகவையும் அது செயல்படுத்திவரும் மக்கள் ஆட்சியையும் கெடுக்க நினைப்பவர்கள், அழிந்துபோவார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.

இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close