[X] Close

ஈரோட்டில் முதல்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 192 காளைகள் பங்கேற்பு: 11 காளைகளை அடக்கிய மதுரை இளைஞர் சிறந்த வீரராக தேர்வு


erode-jallikattu

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 10:08 am
  • அ+ அ-

ஈரோட்டில் நேற்று முதல்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 192 காளைகள் கலந்து கொண்டன. இதில் 11 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்டத்தில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 192 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. இதுபோல், ஈரோடு, மதுரை,திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 122 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

காளைகளின் உரிமையாளர்கள், காளைகளின் செல்லப் பெயர்களைக் கூற, வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக திறந்துவிடப்பட்டன. சில காளைகள் வீரர்களை தூக்கி வீசியது.

காளைகளை அடக்கியவர்களுக்கு செல்போன், கிரைண்டர், கைக்கடிகாரம், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக மதுரையைச் சேர்ந்த மாடுபிடி வீரரான கல்லூரி மாணவர் கார்த்திக் 11 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு பெற்றார். அவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதுபோல் ‘காளையர்களின்’ பிடியில் சிக்காமல் போக்குகாட்டி, மிரட்டிய காளைகளுக்கும் விழாக் குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே காளைகள் முட்டியதில் மதுரையைச் சேர்ந்த தனபால் (30), அழகுசொக்கன், பாண்டியராஜன், திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் (25), புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் (32),சதீஷ் (23) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தனபால் என்பவர் மட்டும் ஈரோடு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். ஈரோடு மாவட்ட எஸ்பி எஸ்.சக்திகணேசன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close