மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ளது ஜெ ஜெ நகர். இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் 34 குடிசைகளில் வசித்து வருகின்றனர். அது, நிரந்தர குடியிருப்பாக மாறி 20 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், மின் இணைப்பு தரப்படாததால் அம்மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக, கோடை மற்றும் மழைக்காலங்களில் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார்கள். இவர்களது குழந்தைகளோ, பக்கத்துத் தெருவில் உள்ள தெரு விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த போதிலும், தமது அலுவலக குழுவை அனுப்பி அப்பகுதியின் உண்மை நிலை குறித்த தகவல்களை விசாரித்து அறிந்தார். பின்னர், அங்குள்ள மக்களுக்கு மின் இணைப்பு தரும்படி மதுரை மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, மின் துறை அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை சேர்ந்த 6 வீடுகளுக்கு இன்று மின் இணைப்பு வழங்கினர். மீதமுள்ள வீடுகளுக்கு கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, மின் இணைப்பை தர உள்ளதாக தெரிவித்தனர்.