[X] Close

பரங்கிப்பேட்டையில் லட்சம் பெண்களுக்கு கல்வி அளித்த சேவா மந்திர்:  பாரம்பரிய பள்ளி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது 


சேவா மந்திர் பள்ளியில் உள்ள காந்தியடிகளின் பாத ரட்சை - ஆனிமேரி பீட்டர்சன்

  • kamadenu
  • Posted: 05 Apr, 2018 11:26 am
  • அ+ அ-

100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், டென்மார்க் நாட்டை சேர்ந்த ஆனிமேரி பீட்டர்சன் என்ற பெண்மணி தமிழகத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் தங்கியிருந்து, மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளார். 

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய காந்தியடிகளின் கொள்கை ஆனிமேரியைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 

திருக்கோவிலூரில் இருந்த ஆனிமேரி, வெளிநாடுகளுக்கு செல்ல நீர்வழி தளமாக (கப்பல் வழி) அப்போது இருந்த சிதம்பரம் அருகே இருக்கும் பரங்கிப்பேட்டை பகுதிக்கு சென்று, அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி குறித்து ஆய்வு செய்துள்ளார்.

பெண்களுக்கு கல்வி அளித்தார் 

 அந்தப் பகுதியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தை கண்ட ஆனிமேரி, ‘பெண்கள் கல்வியில் முன்னேறுவதே அவர்களின் அடிமைத் தனத்தை அகற்றும்’ என்று கூறி, அதே பகுதியில் ஒரு குடிசையை அமைத்து, அப்பகுதிகளில் உள்ள பெண்களிடம் கல்வியறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

பின்னர் அது சிறு பள்ளியாக உருவெடுத்தது. இதற்கிடையே காந்தியடிகள் பங்கு பெறும் கூட்டங்களுக்குச் சென்று அவரது உரையை கேட்பது, அண்ணலின் அறவழிக் கொள்கை குறித்து அவருக்கு கடிதம் எழுதுவது, நேரடி தொடர்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என செயல்பட்டிருக்கிறார் ஆனிமேரி பீட்டர்சன். தன் கொள்கையில் ஈர்ப்புள்ள ஆனிமேரி, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக கல்விக் கூடம் ஒன்றை பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிற தகவல் காந்தியின் காதை எட்டியிருக்கிறது. 

சிதம்பரம் வந்தார் காந்தி 

இந்நிலையில், கடந்த 1921ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சிதம்பரம் நகருக்கு காந்தியடிகள் முதன் முறையாக வந்தார். அப்போது, டவுன்ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு பரங்கிப்பேட்டையில் ஆனிமேரி பீட்டர்சன் நடத்தி வரும் பள்ளியை பார்வையிட சென்றார். 

பள்ளியைப் பார்வையிட்ட அவர், குடிசையில் இருந்த பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, அந்தப் பள்ளிக்கு ‘சேவா மந்திர்’ என்று பெயரிட்டுள்ளார். “இந்த பகுதி ஏழை பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கிடைக்க நீங்கள் தொண்டாற்ற வேண்டும்’’ என்று காந்தியடிகள் பள்ளியின் தாளாளராக இருந்த ஆனிமேரி பீட்டர்சனிடம் அப்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

காந்தியின் நினைவை போற்றும் வகையில் அன்று அவர் அணிந்து வந்த மிதியடியை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம், இன்று வரை அதனை கண்ணாடி பேழையில் பாதுகாத்து வருகிறார்கள். 

இப்பள்ளி எப்போதெல்லாம் நிதி பற்றாகுறையால் தள்ளாடியதோ, அப்போதெல்லாம் காந்தி, தனது அரிஜன சேவை நிதியிலிருந்து உதவி செய்து வந்துள்ளார்.

1941 பிப்ரவரி மாதம் 16ம் தேதி பள்ளியின் கல்விச் சேவை குறித்து காந்தியடிகள் பள்ளிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்து கேட்டுள்ள காந்தி, டென்மார்க் நாட்டிலிருந்து கிடைக்கும் உதவிகளை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதமும் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உயர்ந்த பொறுப்பில் பழைய மாணவிகள் 

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளி தற்போதும் செயல்பட்டு வருகிறது. ஏறக்குறைய 1 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்த பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தப் பள்ளி. 

கிறிஸ்தவ வழிபாட்டு பள்ளியாக இருந்தாலும், காந்தியின் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதால், உண்டு உறைவிட பள்ளியாக இன்று வரையிலும் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளியின் நிர்வாககுழுவில் உள்ள லீலாவதி கூறுகையில், “எங்களின் பெரியம்மா (ஆனிமேரி பீட்டர்சன்) ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக இந்த கல்விக் கூடத்தை தொடங்கினார். 

பள்ளியில் படித்த மாணவிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர்ந்த பொறுப்புகளில் உள்ளனர். குறிப்பாக இந்தப் பள்ளியின் மாணவி விமலா தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். இது எங்கள் பள்ளிக்கு கிடைத்த பெருமை. 

நிதி நெருக்கடியில் பள்ளி

தற்போது இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் மெட்ரிக் பள்ளியை தவிர மற்றவைகள் உண்டு உறைவிட பள்ளியாக உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள முக்கிய கட்டிடங்களை டென்மார்கில் உள்ளவர்கள் அப்போது கட்டிகொடுத்துள்ளனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி விடுகிறது. விடுதி உணவு உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.

பள்ளியின் நிலைமையை எடுத்துச் சொல்லி, பள்ளியில் படித்த பழைய மாணவிகளை அழைத்து உதவி கேட்க உள்ளோம்’’ என்றார். வேர்களைத் தாங்கும் விழுதுகள் போல பழைய மாணவிகள் வந்தாலும், தமிழக அரசும் இந்த பள்ளி மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கடலூர் மாவட்ட கல்வியாளர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். 

- க.ரமேஷ் 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close