மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தம்


திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர்கள் மணிமுத்தாறு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தென்காசியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஒய்வு பெற வலுகட்டாயமாக பிபிடிசி (BBTC) நிர்வாகத்தால் கையெழுத்துப் பெறப்படுவதாக குற்றம்சாட்டினார். அது பற்றி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் விசாரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலையில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், கட்சி நிர்வாகிகளும் மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு கார்களில் சென்றனர். ஆனால், மணிமுத்தாறு வனசோதனைச் சாவடியில் வனத்துறையினரும் காவல் துறையினரும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

“மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு சுற்றுலா பயணியாக செல்வதானால் அனுமதிக்கிறோம். அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவோ, தொழிலாளர் நலன் குறித்து பேசவோ மாட்டோம் என எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு நீங்கள் செல்லலாம்” என அவர்களிம் தெரிவித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியினர் அதற்கு சம்மதிக்க மறுத்து அந்தப் பகுதியிலேயே வனத்துறை மற்றும் போலீஸ் அனுமதிக்காக காத்திருந்தனர்.