[X] Close

பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜன.21-ல் உள்ளூர் விடுமுறை 


increasing-attendance-of-the-palani-padhayathirai

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடியுடன் பாதயாத்திரையாக பழநி சென்ற குன்றக்குடி பக்தர்கள். இடம்: நத்தம்.

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 11:31 am
  • அ+ அ-

பி.டி.ரவிச்சந்திரன்

பழநி 

தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தேரோட்டம் நடைபெறும் ஜன.21-ல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இத்திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பழநிக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டு விட்டனர்.

காரைக்குடி, குன்றக்குடி பகுதிகளில் இருந்து பல நூற்றாண்டு பாரம்பரியமாகக் காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் தேரோட்டத்துக்கு முன்பு பழநி சென்றடைவர்.

பக்தர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இரவில் நடந்து செல்லும் பக்தர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க ஒளிரும் குச்சிகள், வழிநெடுகிலும் குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளன. பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக பழநி- ஒட்டன்சத்திரம் பாதையை ஒருவழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 19 முதல் தேரோட்டம் முடியும் வரை வாகனங்களை கள்ளி மந்தயம் வழியாக மாற்றுப்பாதையில் அனுமதிக்க உள்ளனர்.

3,000 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். உயர் கோபுரங்கள் அமைத்தும், சிசி டிவி கேமரா அமைத்தும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பாத யாத்திரை பக்தர்கள் வழியில் தங்கி ஓய்வெடுக்க மேற்கூரை வசதி, கழிப்பிட வசதி, குளிப்பதற்கு வசதியாக இடும்பன்குளம், சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் குளியலறைகளும் இலவசமாக அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்குகின்றனர். ஜன.19 முதல் 23-ம் தேதி வரை தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜன.21-ம் தேதி நடை பெறுகிறது. அன்று திண்டுக்கல் மாவட்ட மக்கள் விழாவில் பங்கேற்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close