[X] Close

அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு: முதல் நாள் இரவே திரண்ட வெளிமாவட்ட வீரர்கள்


alanganallur-jallikattu

ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெயர் பதிவு செய்ய வந்த வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள். படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 10:40 am
  • அ+ அ-

அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு நேற்று நடந்தது. இதில் திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு வெளிமாவட்ட வீரர்கள் முதல் நாள் இரவே திரண்டனர். கூட்ட நெரிசல், தடியடி என எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், விரைவாகவும் முடிந்தது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதற்காக வாடிவாசல், தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த காவல், வருவாய், கால்நடை துறையினர் எனப் பல்வேறு துறையினர் இணைந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு நேற்று நடந்தது. அலங்காநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அதிகாலை 4 மணிக்கே மாடுபிடி வீரர்கள் குவிந்திருந்தனர். திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் முதல்நாள் இரவே அலங்காநல்லூர் வந்து தங்கி பதிவை மேற்கொண்டனர்.

வீரர்கள் வருகை முன்னுரிமை அடிப்படையில் போலீஸார் டோக்கன் வழங்கினர். 800 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இவர்கள் நூறு, நூறு பேராக தனித்தனி அறையில் அமர வைக்கப்பட்டனர். வரிசைப்படி வீரர்கள் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வயது, எடை, ரத்த அழுத்தம், கண் பார்வை உள்ளிட்ட உடல்தகுதி பரிசோதனை நடந்தது. அதை முடித்த வீரர்களுக்கு உடனே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய பரிசோதனை 11 மணிக்கு நிறைவடைந்தது.

கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு, தடியடி என எந்த பிரச்சினையும் இல்லாமல் வீரர்கள் பதிவு முடிந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மொத்தம் 876 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 848 பேர் தகுதி பெற்றனர். அவனியாபுரத்திலும் 800 பேர் வரை பதிவு செய்தனர்.

இதுகுறித்து வாடிப்பட்டியைச் சேர்ந்த பிரபல மாடுபிடி வீரர்கள் வினோத்குமார், வீரகாளிதாஸ் ஆகியோர் அலங்காநல்லூரில் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வேண்டும் என்பது வீரர்களின் கனவு. இதுவரை பல ஆண்டுகளாக நடந்து வரும் வீரர்கள் பெயர் பதிவில் கடும் கூட்ட நெரிசல் இருக்கும். போலீஸ் தடியடி சாதாரணமாக நடக்கும். வீரர்கள் பெரும் சிரமத்துக்கு இடையேதான் பரிசோதனைக்கு செல்ல முடியும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், விழாக் கமிட்டியினர் சிபாரிசில் பலர் இடையிடையே நுழைவார்கள். பல்வேறு குழப்பங்களுக்கும், அடிதடிக்கும் இடையேதான் வீரர்கள் பதிவு நடக்கும். ஆனால் நேற்று மிக சுலபமாகப் பெயர் பதிவு முடிந்தது. இதற்குக் காரணம், போலீஸார் தனியாக டோக்கன் வழங்கியதுதான். டோக்கன் பெற்றவர்களை தவிர்த்து மற்றவர்கள் அந்த வளாகத்தைவிட்டே வெளியேற்றப்பட்டனர் என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close