[X] Close

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சார்பில் ரூ.100 கோடியில் மருத்துவமனை உள்ளிட்ட 6 திட்டங்கள் தொடக்க விழா


6-schemes-inauguration-including-a-rs-100-crore-hospital-on-behalf-of-thoothukudi-sterlite

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:58 am
  • அ+ அ-

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி பகுதியில் ரூ.100 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை, பள்ளி, கடல்நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளிட்ட 6 திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரும் வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றபோது, தூத்துக்குடி பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி முதலீடு செய்ய தயாராக இருப்பதாக வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து, தேசிய பசுமைதீர்ப்பாயம் கடந்த மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. அப்போது ரூ.100 கோடி முதலீடு திட்டத்தை 3 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் 6 திட்டங்களை செயல்படுத்த ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில்திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டது. இந்த திட்டங்களின் அறிமுக விழா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் ஏ.சர்வேசன் வரவேற்றார்.

ஸ்டெர்லைட் துணைத் தலைவர் டி.தனவேல் தலைமை வகித்தார். ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் உலகத் தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை. ஆண்டுக்கு 5,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனை மையம். ஆண்டுக்கு 5,000 மகளிருக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் திட்டம். ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கூடம். ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். 3 ஆண்டுகளில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பசுமை தூத்துக்குடி திட்டம். இத்திட்டங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் முடிவில் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஏ.சுமதி நன்றி கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close