[X] Close

அரசு எந்த முடிவும் எடுக்காததால் நீதிமன்றத்துக்கு தந்த உறுதிமொழியை திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்?


zakto-jio-got-back-the-pledge-to-the-court-because-the-government-did-not-take-any-decision

ஜாக்டோ ஜியோ அமைப்பு

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:55 am
  • அ+ அ-

வேலை நிறுத்தத்தை நிறுத்திவைப்பதாக உயர் நீதிமன்றத்துக்கு ஜாக்டோ- ஜியோ அளித்த உறுதிமொழி திரும்பப் பெறப்பட்டது. பல முறை அவகாசம் வழங்கியும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறியதால், ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

தமிழத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் டிச. 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர்.

இதற்குத் தடை விதிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர் லோகநாதன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு டிச. 3-ல் விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ - ஜியோ கோரிக்கை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஜன. 7-ல் விசாரணைக்கு வந்தபோது, ஊதிய முரண்பாடுகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக சித்திக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. கூடுதல்அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிடுகையில், ஊதிய முரண்பாடுகளைக் களைவது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழுக்களின் அறிக்கை மீது விரைவில் முடிவெடுக்கப்படும். இதனால் 4 வாரகாலஅவகாசம் வேண்டும் என்றார்.

ஜாக்டோ - ஜியோ வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்தோம். பலமுறை அவகாசம் வழங்கியும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும், நீதிமன்றமும் போதிய வாய்ப்பு வழங்கியும் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

7 லட்சம் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுமறுக்கிறது. இதனால் வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்துக்கு ஜாக்டோ - ஜியோ சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை திரும்பப் பெறுகிறோம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜாக்டோ- ஜியோ கோரிக்கையை கொஞ்சமாவது நிறைவேற்ற வேண்டும். அரசு எதுவுமே செய்யாத நிலையில், நாங்கள் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம் ஒன்றும் சொல்ல முடியாது. வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவைத்து அவர்கள் அளித்த உறுதிமொழியைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதி வழங்குவதைத் தவிர வேறுவழியில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஜாக்டோ- ஜியோ உறுதிமொழி திரும்பப் பெறப்பட்டதை பதிவு செய்து கொண்டு, விசாரணையை ஜன.28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழியை திரும்பப் பெற்றதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீண்டும் விரைவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என ஜாக்டோ - ஜியோ வட்டாரம் தெரிவித்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close