[X] Close

இருசக்கர வாகன வசதி இல்லாததால் எஸ்பிசிஐடி போலீஸார் அதிருப்தி


spcid-police

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:48 am
  • அ+ அ-

டி.ஜி.ரகுபதி 

கோவை 

தமிழக காவல் துறையில் மற்ற பிரிவுகளைக் காட்டிலும் மாநிலத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் சட்டம் ஒழுங்கு பிரிவு முக்கியமானதாகும். சட்டம் ஒழுங்கு பிரிவின் ஆணி வேராக உள்ளது உளவுப்பிரிவு ஆகும். அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள், இயக்கங்கள், சந்தேகத்துக்குரிய, சர்ச்சைக்குரிய நபர்களின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கண்காணித்து, கிடைக்கும் முக்கிய தகவல்களை மேலிடத்திற்கு பரிமாற்றம் செய்து, சட்டம் ஒழுங்கு பாதிக்காமல், பாதுகாப்பது ஆகியவற்றில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள உளவுப்பிரிவு (ஐஎஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு(எஸ்ஐசி), மாநில உளவுப்பிரிவு தலைவர் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை(எஸ்பிசிஐடி) ஆகிய மூன்று வகைகளில் உள்ளது. இதில் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை முக்கியமானதாகும். இந்த பிரிவு மாநகர் மற்றும் புறநகர் ஆகிய இரு பகுதிகளிலும் செயல்படும். இந்த சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் போலீஸார் தங்களுக்கு வாகனம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் சிலர் கூறியதாவது: எஸ்பிசிஐடி மாநகர் பிரிவில் 22 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 2 எஸ்ஐ, 15 சிறப்பு எஸ்ஐ என 17 பேர் பணியாற்றுகின்றனர். புறநகர் எஸ்பிசிஐடி பிரிவில் 18 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 15 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். எங்களுக்கு சப்-டிவிஷன் வாரியாக பிரித்து பணி ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரு சப்-டிவிஷனில் 3 முதல் 5 காவல் நிலையங்கள் உள்ளன. தவிர, குற்றப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களையும் கண்காணிக்க வேண்டும்.

மாநகரில் உள்ள எஸ்.பி.சி.ஐ.டி போலீஸார் தினசரி குறைந்தபட்சம் 30 கிலோ மீட்டரும், புறநகரில் உள்ள எஸ்.பி.சி.ஐ.டி போலீஸார் குறைந்தபட்சம் தினசரி 60 கிலோ மீட்டரும் தகவல்களை சேகரிக்க வாகனத்தில் சென்று வருவோம். இதற்கு எங்களது சொந்த இருசக்கர வாகனத்தையே பயன்படுத்துகிறோம். பெட்ரோல் நிரப்பவும், செல்போன் கட்டணம் செலுத்தவும் எங்களது சம்பள தொகையையே செலுத்த வேண்டியுள்ளது. எங்களுக்கு என சலுகைகள் இல்லை. எங்களுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் முதலில் வழங்கப்பட்டது. அப்போது 20 லிட்டர் பெட்ரோல் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனால், காலக்கெடு முடிந்தவுடன் அந்த இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டனர். புதிய வாகனம் மீண்டும் ஒதுக்கப்படவில்லை. மூன்றாண்டுகளுக்கு மேலாக எங்களது சொந்த வாகனத்தையே பயன்படுத்துகின்றோம். விடுமுறை இன்றி நேரம், காலம் பார்க்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தகவல்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு பெட்ரோல் வசதியுடன் இருசக்கர வாகனம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இங்கு நிலவும் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கேட்ட போது, எஸ்.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளர் பழனிசாமி கூறும் போது,‘‘ எஸ்.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அரசு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என உளவுப்பிரிவு தலைவருக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளோம். விரைவில் வழங்கப்பட்டு விடும்,’’ என்றார்.சந்தேகத்துக்குரிய, சர்ச்சைக்குரிய நபர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, கிடைக்கும் தகவல்களை மேலிடத்திற்கு பரிமாற்றம் செய்து, சட்டம் ஒழுங்கு பாதிக்காமல், பாதுகாப்பதில் எஸ்பிசிஐடி போலீஸாரின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close