[X] Close

தீங்கான திட்டங்களை அமல்படுத்தினால் மத்திய அரசை எதிர்ப்போம்: தம்பிதுரை உறுதி


thambidurai-speech

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:45 am
  • அ+ அ-

தமிழகத்துக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம் என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக, பொருளாதார இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. ரூ.8 லட்சம் வருவாய் என்பது, மாதம் ரூ.70 ஆயிரம் பெறுவோரின் வருமானமாகும். இந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்தால், நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டுமென பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் போராடினர். ஜாதி வேற்றுமை நீங்க வேண்டுமென திராவிடக் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமத்துவத்தைக் கொண்டுவர பல போராட்டங்களுக்குப் பிறகு இடஒதுக்கீடு கிடைத்தது. பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். எனவே, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு நிர்ணயிப்பது தவறாகும். எனவேதான், இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எனது கண்டன உரையைப் பதிவு செய்தேன்.

காவிரி, மேகேதாட்டு உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறது. சில திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்களை ஆதரித்துள்ளோம். அதேசமயம், தமிழகத்துக்கு தீங்குவிளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம்.

ஊழலில் ஒற்றுமைமத்திய அரசிடம் நட்பாக இருப்பது என்பது வேறு, மண்டியிடுவது வேறு. தமிழக அரசை மத்திய அரசு இயக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. தமிழக மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களைக் கொண்டுதான் ஆட்சி நடத்தி வருகிறோம்.

பாதுகாப்புத் துறையில் நிலவும் ஊழலைப் பற்றிப் பேசினால், நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசக்கூடாது என்கிறார்கள். அகஸ்தா விமானம் வாங்க முடிவு செய்தது பாஜக. அதை வாங்கியது காங்கிரஸ். அதேபோல, ரஃபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதை வாங்கியது பாஜக. ஊழல் செய்வதில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close