[X] Close

திருத்தணி, புதுவையில் கடும் குளிர்: வால்பாறை, உதகையில் உறைபனி நிலவுகிறது 


heavy-cold

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 06:48 am
  • அ+ அ-

திருத்தணி மற்றும் புதுச்சேரி யில் குறைந்தபட்ச வெப்பநிலை யானது, வழக்கமாக இருப்பதை விட 5 டிகிரி செல்சியஸூக்கு மேல் குறைந்து கடும் குளிர் நிலவுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. மலைப் பிரதேசங்களிலும், நிலப் பகுதிகளிலும் குறிப்பிட்ட இடங்களில் வழக்கத்தை விட அதிக குளிர் நீடித்து வருகிறது. கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. வால்பாறை, உதகை போன்ற பகுதிகளில் உறைபனியும் நிலவுகிறது. இதில் திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 6.3 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. அதேபோன்று புதுச்சேரியில் வழக்கத்தை விட 5.2 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வான் பகுதியில் மேகக்கூட்டம் குறைவாக உள்ளது. அதன் காரணமாக நிலப்பகுதிகளில் இருந்து ஆவியாகும் நீர் குளிர்ந்து மீண்டும் பூமிக்கே வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகமாக இருப்பதுடன், சில இடங்களில் உறைபனியும் ஏற்படுகிறது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி, மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த அளவாக வால்பாறையில் 3 டிகிரி, உதகையில் 6 டிகிரி, கொடைக்கானலில் 10.5 டிகிரி, குன்னூரில் 9.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப் பகுதியில், மிகக் குறைந்த அளவாக திருத்தணியில் 11 டிகிரி, தருமபுரியில் 14.5 டிகிரி, வேலூரில் 14.8 டிகிரி, புதுச்சேரியில் 15.8 டிகிரி, சேலத்தில் 16.1 டிகிரி, கரூர் பரமத்தியில் 16.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், உள் மாவட்டங்கள் சிலவற்றில் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு நிலவக்கூடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close