திமுகவுக்கு கைகொடுத்த மேட்டூர்: கடந்த தேர்தலை விட வாக்கு வித்தியாசம் சரிவு @ தருமபுரி


மணி

மேட்டூர்: தருமபுரி மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு மேட்டூர் தொகுதி கைகொடுத்துள்ளது. ஆனால், கடந்த தேர்தலை விட, வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது.

தருமபுரி மக்களவை தொகுதியில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. திமுக வேட்பாளர் மணி, அதிமுக வேட்பாளர் அசோகன், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி உள்பட 24 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, திமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார். பின்னர், வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் 21,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், தற்போது, நடந்து முடிந்த தேர்தலிலும், பாமக விட, திமுகவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2 தேர்தலிலும், மேட்டூர் தொகுதி திமுக வெற்றி பெற கைக்கொடுத்துள்ளது. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு 98,327 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்க்கு 82,864 வாக்குகளும் பதிவாகின.

இதில் பாமக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் 15,463 கூடுதலாக பெற்றார். தற்போது, நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளருக்கு 67,824 வாக்குகளும், பாமக வேட்பாளருக்கு 63,265 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 56044 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதில் பாமக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் 4,559 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால், கடந்த தேர்தலை விட, தற்போது, குறைந்தளவே வாக்கு வித்தியாசம் தான் உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணியில் தேர்தலை சந்தித்த போது, இருந்த வாக்கு வித்தியாசத்தை விட, தற்போது, திமுக குறைவான அளவே வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.