[X] Close

`சிற்பி’ என்னும் கிராமத்து நதி- பன்முக வித்தகர் கடந்து வந்த பாதை...


the-sculptor-is-a-river

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 12:17 pm
  • அ+ அ-

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திடம் சிறிது நேரமே பேசிக் கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய உலகமே காலடியில் விழுந்துவிட்டது மாதிரியான உணர்வு ஏற்படும். சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர், சாகித்ய அகாடமி விருதுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல, அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என பன்முகம் கொண்ட இவரது பாதையே ஒரு கிராமத்து நதிபோல அழகாய்ச் செல்லும்.

பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது,  82 வயதானாலும் அவரது  நூலகத்துக்குள் சென்று, அவர் எழுதிய, தயாரித்த, பதிப்பித்த, மொழிபெயர்த்த  நூல்களைக் காட்டினார்.

"பத்திரிகைகளில் `ஒரு புதுக்கவிதை வராதா?` என்று ஏங்கியிருந்த  காலம். கண்ணதாசன், தான் நடத்திய இதழ்களில் ‘ஈற்றடி’ மட்டும் கொடுத்து, இளைஞர்களுக்கு வெண்பா போட்டி நடத்துவார். அதில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, பல வெண்பாக் கவிதைகளை எழுதி அனுப்புவேன். பாலன், செந்தாமரை, சிற்பி என  ஒவ்வொன்றுக்கும்,  வெவ்வேறு புனைப் பெயர்களைச் சூடிடுவேன். அதில் நிலைத்ததுதான் சிற்பி.

நான் பிறந்தபோது, பெரிய அளவுக்கு வசதி இல்லை. ஆத்துப் பொள்ளாச்சியில் பூர்வீக நிலங்கள்  உரிமை கொண்டாட முடியாதபடி வழக்கில் இருந்தன. நான் பிறந்த பின்புதான்,  அவை அப்பாவின் கைக்கு வந்தன. அப்பா பொன்னுசாமிக்கு விவசாயத்தில் பெரிய நாட்டமில்லை. ஆனால், அவர் நன்றாகப் பாடுவார். எங்கே நாடகம் நடந்தாலும், அதைப் பார்க்கப்போய் அதில் இரண்டறக் கலந்துவிடுவார். அந்த நாடகக் குழுவை தன் ஊருக்கு கூட்டிவந்து, நாடகம் நடத்த ஏற்பாடு செய்துவிடுவார். இதுபோன்ற காரணங்களில் நிலங்களை விற்க வேண்டியதாயிற்று. ஆகவே,  எனக்கு கிராமம் தெரியும், விவசாயம் தெரியாது.

ஊரில் மூன்று பக்கமும் ஆழியாறு.  தீவு போல எங்கள் கிராமம். வருடம் முழுக்க பெருவெள்ளம் ஓடும். அந்த நதியின்  ஓட்டத்தில் நானும் இணைந்தே இருந்தேன். அதுதான்,  ‘தானும் உணவாகி, மீனும் உணவாகும் இந்த நதிக்கு நானும் உணவாவேன்!’ என  ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதையை எழுதவும் காரணமானது. (இந்தக் கவிதை அடங்கிய கவிதை நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது).   இத்தனைக்கும் நான் மீன் சாப்பிடுபவனும்  அல்ல.

வியக்க வைத்த தமிழறிஞர்கள்

முதலில் என்னை உள்ளூர் முனிசிபாலிட்டி பள்ளியில் சேர்த்தார் அப்பா.  எனக்குப் படிக்கப்  பிடிக்கவில்லை. ஒரு சமயம் ஊரை விட்டே ஓடிப்போனேன். அதனால் என் அப்பா கவலையடைந்தார். மகன் நன்றாகப் படிக்க  வேண்டுமென விரும்பினார். அப்போதுதான்,  கேரளா தத்தமங்கலத்தில் சாமியப்பா பிள்ளை என்ற நல்லாசிரியர் இருப்பதாகவும், அவர் பிள்ளைகளுக்கேற்றபடி பாடம் எடுப்பதாகவும் கேள்விப்பட்டு, என்னை அங்கே கொண்டுபோய்விட்டார். ஆசிரியர் வீட்டிலேயே நான் தங்கிப் படித்தேன். அங்கே தமிழும், ஆங்கிலமும் மட்டுமே அந்தந்த மொழியில். மற்றவையெல்லாம் மலையாளத்தில்தான்.

எனவே, எனக்கு மலையாளம், ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு தமிழ் தெரியாது. தமிழ்நாட்டுக்கு வந்து இன்டர்மீடியட் கல்லூரிப் படிப்பில் காலடியெடுத்து வைத்தபின்புதான் எனக்குத் தமிழே தெரிந்தது. எனக்கு அங்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அப்துல் கபூர்,  தென்றலைப் போன்ற தமிழுடையவர். அவரின் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். ஆடம்பரமோ, அலங்காரமோ இருக்காது. நம் தாய்மொழியில் இவ்வளவு வளமா என வியக்க வைத்தது அவரது தமிழ்.

அப்துல்கபூருக்கு இணையாக, ர.பி.சேதுப்பிள்ளை, ஸ்ரீனிவாசன் ராகவன் போன்றோரின் தமிழ் சொற்பொழிவு  அருவிகளுக்குள்  நனைந்து, பேரின்பம் கொண்டேன். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்தபோது, அங்கே இன்னொரு வாய்ப்பும் வந்தது. திராவிட இயக்கம் வேரூன்றிய அந்தக் காலத்தில், அவ்வியக்கச் சிந்தனையாளர்களின் சொற்பொழிவின் மையமாக திருச்சியே விளங்கியது.

கருணாநிதி, ம.பொ.சி. போன்றோரின் உச்சகட்ட பேச்சாற்றலைத் தெரிந்துகொள்ளும் இடமாக அது மாறியது. நான் இன்டர்மீடியட்டில் படித்ததோ கணிதமும், அறிவியலும். அப்பாவுக்கு நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது விருப்பும். மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பக்கூட ஆசைப்பட்டிருந்தார். ஆனால், எனக்குள் புகுந்த தமிழின்பம், அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்க வைத்தது. தொடர்ந்து,  பாரதி-வல்லத்தோடு ஒப்பாய்வை சென்னைப் பல்கலைக்கழகத்தில்  செய்யவும் தூண்டியது" என்றார் பெருமிதத்துடன்.

ஆசிரியப் பணியும், இலக்கியப் பணியும்...

தொடர்ந்து, ஆசிரியப் பணி, இலக்கியப் பணியை தேர்ந்தெடுத்ததற்கான சூழலை விவரித்தார் சிற்பி. "தத்தமங்கலம் பள்ளி ஆசிரியர் சாமியப்பா பிள்ளை, நேர்மையான, கண்டிப்பான மனிதர். மாணவர்களின்  தவறுகளுக்கேற்றபடி பிரம்படி விழும். அதேநேரம், அன்பும் மிகுதியாக இருக்கும்.

அடுத்தது, கல்லூரி ஆசிரியர் அப்துல்கபூரின் அசாத்திய புலமை. பாடம் கற்பிப்பதே ஒரு கவிதைபோல பாய்ந்தோடி வரும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மு.அண்ணாமலை கவிதை எழுத்துலகில் வித்தகர். கா. மீனாட்சிசுந்தரம் தூய்மையும்,  நேர்மையும் எழுத்துமாகி நின்றவர். இப்படியானவர்களைப்போல நாமும் ஆக வேண்டும் என்ற வேட்கைதான் ஆசிரியப் பணிக்குள் கொண்டு போனது.

முதல் நூல் `நிலாப்பூ`

இத்தகைய பெருந்தகைகளின் அறிவாற்றலால் ஊறிக்கிடந்து எழுதிய கவிதைகளை ‘நிலாப்பூ’ என்ற தலைப்பில் முதல் நூலாக 1960-ல் வெளியிட்டேன். அகிலன், மு.அண்ணாமலைதான் விழா பிரமுகர்கள். தொலைக்காட்சி இல்லாத, சினிமா மோகம் பெரிதாக இல்லாத அக்காலத்தில் பொள்ளாச்சியில் பெருங் கூட்டம்.

`மருத்துவப் படிப்பை மகன் படிக்கவில்லையே` என்று வருடக்கணக்காக பேசாதிருந்த அப்பா,  அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார். அப்போது,  எனக்கும், என் கவிதைக்கும் கிடைத்த மரியாதையை பார்த்தபின்புதான் மனம் சமாதானமாகி பேசினார்" என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார் சிற்பி.

தொடர்ந்து, அவர் எழுதியுள்ள  80-க்கும் மேற்பட்ட நூல்கள், அதனுள் அமைந்த கவிதை, கவிதை நாடகம், புதினம், இலக்கிய வரலாறு, கட்டுரை நூல்கள் குறித்தெல்லாம் பேசினார்.  சாகித்ய அகாடமி குழு ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு அவர் ஆற்றிய, தற்போது ஆற்றி வரும் நூல் தொகுப்புப் பணிகளையும்,   கைவசம் உள்ள திட்டங்களையும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, அவர் நிர்வகித்து வரும் மொழிபெயர்ப்பு மையத்தின் செயல்பாடுகள், அதில் உருவாகியிருக்கும் நூல்கள், சாகித்ய அகாடமி பணிகள், அதன் மூலம் தொகுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொகுதிகள் குறித்து விளக்கினார்.

கலீல் ஜீப்ரான் கவிதைகள் மொழிபெயர்ப்பு, நீல.பத்மநாபன்-சிற்பி இணைந்து செய்த நூல் தொகுப்பு, பாரதியாரின் கவிதைகள், கட்டுரை மற்றும் கதைகள், அப்துல் கலாமின் ‘பியாண்ட் 2020’ மொழிபெயர்ப்பு என நிறைய நூல்களைக் காண்பித்தார்.

தனது லட்சியம், கனவைப் பற்றிக் குறிப்பிடும்போது, "என்னுடைய லட்சியம் என்பது என்னுடையதல்ல. என் மொழியினுடையது. அதன் லட்சியம் நிறைவேறவில்லையே என்று இப்போதும் நான் பல நாட்கள் தூங்காதிருப்பதுண்டு. என் தாய் மொழி என்பது என் பள்ளிக்கூடத்துக்குக் கூடவா தகுதியில்லாமல் போய்விட்டது" என்றார் கண்கலங்கியபடி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close