கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சியின் தாக்கம்!


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் முதலிடத்தில் திமுகவும், 2-ம் இடத்தில் அதிமுகவும் பிடித்துள்ளது. 3-வது இடத்தை பிடிப்பதில் பாஜக - பாமக கூட்டணி வேட்பாளர் தேவதாஸூக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் 73,652 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் 71,290 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தார்.

கடந்த 2019-மக்களவைத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சர்புதின் 30,246 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி 72,827 வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

கடந்த தேர்தலுடன் ஒப்பீடு: கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக களமிறங்கிய கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரானார்.

அவரைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் 3,21,794 வாக்குகளையும் பெற்று, கவுதமசிகாமணி 3,99,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அப்போது அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்டக் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்த போதிலும் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

2019 தேர்தலின் போது திமுக வேட்பாளர் 7,21,713 வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது 5,61,589 பெற்று, கடந்த தேர்தலைக் காட்டிலும் 1,60,124 வாக்குகளை குறைவாக பெற்றிருப்பதும், நாம் தமிழர் கட்சிக்கான 30,246 வாக்குகளில் இருந்து தற்போது 72,827 வாக்குகள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றமாக காண முடிகிறது.