மக்களின் பிரச்சினைகளுக்காக பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ் திட்டவட்டம்


ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில்பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாமகவுக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாமக தொடர்ந்து உழைக்கும். தேர்தல் வெற்றி, தோல்விகளை கடந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதை பாமக அதன் முதன்மை கடமையாக கொண்டிருக்கிறது. அதே நிலை தொடரும். இனிவரும் காலங்களிலும் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பாமக போராட்டம் தொடரும்.

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியை மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவருக்கு துணை நின்றவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக இடம் பெற்றுள்ள தேசியஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.