[X] Close
 

பள்ளிக்கென பிரத்யேக செயலி இணையதளம், முகநூல் பக்கம்: வியக்க வைத்த அரசுப் பள்ளியின் ஆண்டறிக்கை


school-app

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 31 Mar, 2018 14:41 pm
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சி மேற்குப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 120 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஒரு ஆசிரியரும் பணிபுரிகிறார்.

இப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார வள மேற்பார்வையாளர் ஆ.செல்வராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவையொட்டி, மாணவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், இப்பள்ளியில் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்த உள்ள செயல் திட்டங்கள் குறித்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், பள்ளிக்கென பிரத்யேகமாக இணையதளம், முகநூல் பக்கம் தொடங்கப்படும். பள்ளிக்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். மாணவர்களுக்கான வீட்டுப்பாடங்கள் பெற்றோரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். ஸ்மார்ட் போன் வசதி இல்லாதோருக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் இந்தி மொழிப் பயிற்சி, இசைப் பயிற்சி அளிப்பதுடன் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆண்டறிக்கையை மாணவர் சீ.மனோஜ் தமிழிலும், மாணவி து.ஹர்சினி ஆங்கிலத்திலும் வாசித்தனர்.
பெரும்பாலும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டுவிழாக்களின்போது கோரிக்கைகள்தான் ஆண்டறிக்கையில் பிரதானமாக இடம்பெறும். ஆனால், இப்பள்ளியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது விழாவில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் வீ.மஞ்சுளா கூறியபோது, "இப்பள்ளியில் கடந்த ஆண்டு வரை 57 பேர் புரவலர்களாக இணைந்திருந்தனர். நிகழாண்டில் சேர்ந்த 279 பேருடன் மொத்தம் 336 பேர் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக தலா ரூ.1,000 வீதம் செலுத்தி புரவலராகச் சேர்ந்தனர். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தவே இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்” என்றார்.

-கே.சுரேஷ் 



MGR - Kindle Edition


[X] Close