திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி!


சசிகாந்த் செந்தில்

திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில், சசிகாந்த் செந்தில்(காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பாலகணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன் சமாஜ்) உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர்.

2,256 வாக்கு சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் பதிவான 14,30,738 வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் இரவு வரை திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு, தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

34 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.

இரவு 6.50 மணியளவில் முடிவுக்கு வந்த இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.