[X] Close

நான் இறந்து என் உடலில் கலைஞரின் கண்ணீர்த்துளி; அது நடக்கலியே! – துரைமுருகன் கதறல்


kalaingar-duraimurugan

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jan, 2019 20:28 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நான் இறந்து என் உடலில் கலைஞரின் கண்ணீர்த்துளி விழும் என்று நினைத்திருந்தேன். கடைசியில் அவரின் உடலில் என்னுடைய கண்ணீர் விழுந்தது என்னுடைய துரதிருஷ்டம் என்று சொல்லிவிட்டு பேச்சை முடிக்கும் முன்பாகவே குலுங்கிக் குலுங்கி சட்டசபையில் அழத்தொடங்கினார் துரைமுருகன்.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் கலைஞர் கருணாநிதிக்கு புகழாஞ்சலி செலுத்தினர்.

அப்போது துரைமுருகன் பேசியதாவது:

கடந்த 40 வருடங்களாக என்னை எம்.எல்.ஏ.வாக்கி அழகு பார்த்தவர் கலைஞர். பத்துப்பதினைந்து வருடங்கள் என்னை அமைச்சராக்கி அருகில் வைத்துக்கொண்டவர். பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு உண்டு.

கலைஞர், தன் சொந்தப்பிள்ளைகளை விட எனக்கு முக்கியச் சலுகைகள் கொடுத்து என் மீது அன்புகாட்டினார். என்னை ஒரு தத்துப்பிள்ளை போல் வளர்த்து ஆளாக்கினார். வார்த்தைக்கு வார்த்தை துரை துரை துரை என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். 

அப்பாவும் அம்மாவும் ஒருமுறைதான் உயிர் கொடுப்பார்கள். எனக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்து வாழச் செய்தவர் கலைஞர். நான் நினைத்தது நிறைவேறாமலே போய்விட்டது. அது 2007ம் வருடம். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அது தெரியும். எனக்கு ஆபரேஷன் பண்ணவேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

ஆபரேஷனுக்கு முதல்நாள் இரவு 10 மணி. கலைஞரிடமிருந்து போன். ‘துரை… பயப்படுறியா?’ என்று கலைஞர் கேட்டார். ‘அப்படிலாம் இல்ல’ என்றேன். ‘நீ கோழைடா. பயப்படுவே. நான் இப்ப கிளம்பி வரேன். உன் கூடவே இருக்கேன். காலைல ஆபரேஷனுக்கு உன்னை அனுப்பிட்டு, அப்புறமா வீட்டுக்குப் போறேன்’ என்று சொன்னார். சொன்னதுடன் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். என்னுடனேயே இருந்தார். அவரை வீட்டுக்கு அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது.

அன்றைக்கு கலைஞர் கொடுத்த தைரியம், ஊக்கம். இதய அறுவை சிகிச்சை நடந்து உயிர் பிழைத்தேன். அன்று நான் இறந்திருக்கவேண்டும். என் உடலில் கலைஞரின் கண்ணீர்த்துளி விழுந்திருக்கவேண்டும். என்னுடைய துரதிருஷ்டம் அது நடக்காமல் போனது. ஆனால் அவருடைய உடலில் என் கண்ணீர்த்துளிகள் விழும் நிலை ஏற்பட்டுவிட்டது.

- என்று சொல்லிவிட்டு துரைமுருகன் சின்னக்குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கிவிட்டார். 

துரைமுருகனின் பேச்சைக் கேட்டு பல எம்.எல்.ஏக்கள் கண்ணீருடனும் இறுகிய முகத்துடனும் இருந்தார்கள். அருகில் அமர்ந்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு ஆறுதல் கூறினார். எல்லோரும் நெகிழ்ந்து போனார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close