[X] Close

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதி வருவாயை மத்திய அரசு வழங்கவில்லை: ஆளுநர் உரை


the-federal-government-has-not-provided-financial-revenue-to-tamil-nadu

சட்டப்பேரவை- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 15:51 pm
  • அ+ அ-

நிதி வருவாயில் தமிழகத்துக்குச் சேர வேண்டிய இழப்பீடு மற்றும் பங்குத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை/ உதய் திட்டத்தைச் செயல்படுத்தியதாலும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றம் காரணமாக மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது என ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளுநர் இன்று உரை நிகழ்த்தினார். அதில் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி வருவாய் அளிக்கவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆளுநர் உரை:

“பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையின் ஆறாம் அமர்வுக்கான கூட்டத்தொடரை தொடங்கி வைத்து, எனது உரையை இந்த மாமன்றத்தில் நிகழ்த்துவதை பெரும்பேறாகக் கருதுகிறேன்.

நிதிநிலை சார்ந்த பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நிதி நிலைமையைச் சிறப்பாக நிர்வகித்து வரும் மாநிலமாகத் தொடர்ந்து தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எனினும், மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வில், பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பினால், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உதய் திட்டத்தைச் செயல்படுத்தியதாலும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றியதாலும், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையில் மாநிலங்களுக்கு இடையேயான வரியில் கிடைக்க வேண்டிய பங்கும், இந்த வரி விதிப்புத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும், மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு பற்றிய பரிந்துரைகளை வழங்க குடியரசுத் தலைவர் ஆணைப்படி உருவாக்கப்பட்ட பதினைந்தாவது நிதிக்குழு, 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, மாநில அரசுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்தியுள்ளது. செயல்திறன், பாரபட்சமற்ற நியாயமான நிதிப் பகிர்வு ஆகிய வழிமுறைகளை பதினைந்தாவது நிதிக்குழு பின்பற்றி, தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப் பகிர்விற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

மாறுபட்ட புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் திறம்படக் கையாண்டு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரிவிதிப்பு முறையை தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. எனினும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் 14 சதவீத வருவாய் வளர்ச்சியை மாநிலங்கள் பெறும் வகையில் உறுதியளிக்கப்பட்டவாறு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும், மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் மாநிலத்தின் பங்கினையும் மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், 2017-18 ஆம் நிதியாண்டிற்கு மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான வருவாயினையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 455 கோடி ரூபாய் அளவிலான இழப்பீட்டுத் தொகையையும், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு 1,305 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு இதுவரை வழங்க வேண்டியுள்ள நிலையில், இந்நிலுவை மாநிலத்தின் நிதி நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலுவைத் தொகைகளை விரைவாக மாநில அரசுக்கு வழங்குவதுடன், இனிவரும் காலங்களிலும் மாநிலத்திற்குரிய தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close