[X] Close

அணை பாதுகாப்பு மசோதா தமிழக உரிமைக்கு எதிரானது: ஆளுநர் உரை


the-dam-safety-bill-is-against-tamil-rights

ஆளுநர் உரை, அனை - கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 15:45 pm
  • அ+ அ-

மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் பிற நிறுவனங்கள் சிலவற்றை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் நடந்து வரும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை:

“மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் சில மாற்றங்களைப் பரிந்துரை செய்தும், அணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மோட்டார் வாகனச் சட்ட முன்வடிவிலும், மின்சாரச் சட்ட முன்வடிவிலும் சில கருத்துகளை எழுப்பியும், தேசிய அளவில் மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு சட்ட முன்வடிவுகளில் இந்த அரசு தனது கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளது. இவை தமிழ்நாட்டு மக்களின் நலனையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலியுறுத்தப்பட்டவையாகும்.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அணை பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இயற்றப்படும் இதுபோன்ற சட்ட முன்மொழிவுகளில் தமிழ்நாட்டின் கருத்துகளை மத்திய அரசு பாகுபாடில்லாமல் ஆராய்ந்து, நியாயமான முடிவுகளை எடுக்கும் என நான் நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட இந்த அரசு ஆணையிட்டது. ஆனால், இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்த பின்னரும், இந்த ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. எனினும், இந்த ஆணையை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து இந்த அரசு மேல்முறையீடு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் பிற நிறுவனங்கள் சிலவற்றை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் நடந்து வரும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, சென்னையில் உள்ள உவர்நீர் மீன் வளர்ப்பிற்கான மைய நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலத்தில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மைய அச்சகம் ஆகிய மையங்களை மூடவேண்டும் என்ற முடிவைக் கைவிட்டு, அவற்றைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை மத்திய அரசு ஏற்று சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close