பொள்ளாச்சி | முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை


கே.ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி முன்னிலை பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 97 ஆயிரத்து 467. இதில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 743 வாக்குகள் பதிவாகின. இது 70.41 வாக்குப்பதிவு சதவீதமாகும்.

அதிமுக சார்பில் அ.கார்த்திகேயன், திமுக சார்பில் கே.ஈஸ்வரசாமி, பாஜக சார்பில் கே.வசந்தராஜன், நாம் தமிழர் சார்பில் நா.சுரேஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜே.பெஞ்சமின் கிருபாகரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 15 பேர் போட்டியிட்டனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலைத் தொடங்கியது.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் 25,208 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்: கே.ஈஸ்வரசாமி (திமுக) - 25,208, அ.கார்த்திகேயன் (அதிமுக) - 16,520, கே.வசந்தராஜன் (பாஜக) - 10,977, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி - 8,688 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.