மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டண வசூல் நிறுத்தம்: விதிகள் குறித்த அறிவிப்பு பலகையை எங்கும் வைக்காத மாநகராட்சி


மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

சென்னை: அதிக கட்டண வசூல் மற்றும் வசூல் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவு ஆகிய புகார்கள் காரணமாக மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் நேற்று நிறுத்தப்பட்டது.

வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஸ்மா ர்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

அங்கு நிறுத்தப்படும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க, வாகன நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் செயல்படும் பகுதிகளில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.

அதில், வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டண வசூல் தொடர்பான புகார் தெரிவிக்க, கட்டண வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் ஆய்வாளர் ஆகியோரின் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுநர் புகார் தராத நிலையில் தாக்கிய நபர் மீது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக விதிகளை மீறி பேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது இந்த ஒப்பந்த நிறுவனத்தின் கட்டண வசூல் அனுமதி காலம் நிறைவடைந்த பிறகும் வசூலித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநகராட்சி அறிவுறுத்தியவாறு, கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு பலகை மெரினா வாகன நிறுத்துமிடம் எங்கும் ஒரு இடத்தில் கூட வைக்கப்படவே இல்லை.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூலை நேற்று நிறுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வரை வசூலிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக கட்டண வசூல், ஒப்பந்தம் முடிந்தும் வசூலை தொடர்ந்தது தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வாகன நிறுத்த கட்டண வசூல் தொடர்பான துறையை கவனித்து வரும் பல்வேறு நிலை அதிகாரிகளை தொடர்புகொண்டும், இச்செய்தித்தாள் அச்சேறும் வரை அவர்களிடம் பதில் பெற முடியவில்லை.