[X] Close

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும்


bank-employees-strike

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 07:12 am
  • அ+ அ-

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 14 லட்சம் பேர் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிச் சேவைகள் முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும், ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளதுபோல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடந்த 21-ம் தேதி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. இதனால் 20-ம் தேதிக்கு பிறகு 24-ம் தேதிதான் வங்கிகள் முழுமையாக இயங்கின.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வங்கிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு, வாராக் கடன் வசூல், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வங்கி அதிகாரி கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசகர் தாமஸ் பிராங்கோ விடம் கேட்டபோது, ''கடந்த 21-ம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தத் தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், 26-ம் தேதி (இன்று) நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 4 லட்சம் வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என்றார்.

வங்கிகள் இணைப்பால் ஆபத்து

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலத்திடம் கேட்ட போது, ''வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய அரசின் ஆபத்தான கொள்கைகளைக் கண்டித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் 15 ஆயிரம், நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகள் இயங்காது.

வங்கி அதிகாரிகள், ஊழியர் களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து அதற்கான தீர்வைக் காண முன்வர வேண்டும்'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close