கருணாநிதி 101-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி 41 ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


குன்றத்தூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவுவிழா குறித்து காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (ஜூன் 3) காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்களின் இல்லவிழாவாக, மக்கள் விழாவாக,கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 41 முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மாற்றுத் திறனாளிகள் தங்கும்இல்லம், மனநலம் குன்றியோர்தங்கும் விடுதி, தொழுநோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர் அனைவருக்கும் இன்று அறுசுவை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டம் முழுவதும் ரத்தான முகாம், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம்நடத்துதல், மரக்கன்றுகளை நடுதல், ஏழை – எளியவர்களுக்கு வேட்டி – சேலை வழங்குதல், ஏழை எளிய பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழாவை கோலாகலமான முறையில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

அதேபோல் திமுக அரசின் 3 ஆண்டுக்கால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, மகளிரணி, வர்த்தகர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் சார்பில் கருத்தரங்கம், மாநில அளவிலான ஆணழகன் போட்டி, இன்னிசைபாட்டரங்கம், தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

x