குற்றாலம், கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தென்காசி/திண்டுக்கல்: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர்வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழைபெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். அடிக்கடி பெய்யும் சாரல்மழை, குளிர்ந்த காற்று ஆகியவற்றை அனுபவிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சாரல் மழையால் மகிழ்ச்சி: கடந்த மாதம் பெய்த கோடைமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இந்நிலையில், கடந்த மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியதால், குளிர்ந்த காற்று வீசியது. ஓரிரு நாட்கள் சாரல் மழை பெய்த நிலையில், கடந்த 2 நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.

நேற்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தது. சாரல் மழை இல்லாததால், குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்தது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் கனமழை: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில், அட்டுவம்பட்டி அன்னை தெரசா பல்கலைக்கழகம் அருகே மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் இதமான தட்பவெப்பம் காணப்பட்ட நிலையில், பிற்பகல் ஒருமணிக்கு மேல் இடியுடன் கூடியகனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி,வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று வார விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, ஆத்தூர் நீர்த்தேக்கம், வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், வத்தலகுண்டு பகுதிகளிலும் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.