நடிகர் கருணாஸின் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


சென்னை: திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக நடிகரும், முன்னாள் முன்னாள் எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வந்தார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது, அதில்2 பாக்ஸ்களில் தலா 20 குண்டுகள் வீதம் மொத்தம் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதையடுத்து, கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 40 குண்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கருணாஸிடம் நடத்திய விசாரணையில், நான் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளேன். இந்த குண்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியது. நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால், எனதுகைப்பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் இருந்த 2 பாக்ஸ்களையும் கவனிக்கவில்லை. துப்பாக்கி குண்டுகள் இருந்த கைப்பையை தெரியாமல் எடுத்துவந்துவிட்டேன் என்று தெரிவித்தார். தனது துப்பாக்கி லைசென்ஸ், அதுதொடர்பாக புதுப்பித்த ஆவணங்களையும் கருணாஸ் காட்டினார்.

இதைத்தொடர்ந்து, கருணாஸின் திருச்சி பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை திருப்பி கொடுத்து, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கருணாஸ் காரில் திருச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தசம்பவத்தால் விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.