தோல்வியின் விளிம்பில் உள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சிக்கின்றன: எல்.முருகன் குற்றச்சாட்டு


எல்.முருகன் | கோப்புப்படம்

தூத்துக்குடி/மதுரை: குமரியில் பிரதமரின் தியானத்தை, தோல்வியின் விளிம்பில் உள்ள எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த எல். முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்று, 3-வது முறையாக மோடி பிரதமராகப் பொறுப்பேற்பார்.

குமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்துள்ளார். இந்த தேசம் தர்மத்தை வளர்க்கும் ஆன்மிக பூமி. ஆட்சியாளர்களும் அதுபோல இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் தியானம் மேற்கொண்டார். ஆனால், தோல்வியின் விளிம்பில் உள்ள கார்கே போன்றவர்களும், எதிர்க் கட்சிகளும் இதை விமர்சிக்கின்றன.

காவல் துறை யார் கையில்? - இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்று முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியும். அதனால்தான் அவர் டெல்லிக்குச் செல்ல வில்லை. வெறுப்பைப் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. தமிழக ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு, திடீரென வாபஸ் பெற்றனர். காவல் துறை முதல்வரின் கையில்தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் ஓர் இளைஞர் தெருவில் குப்பை அள்ளவில்லை என்று காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினரிடம் புகார் கூறியுள்ளார். இதற்காக அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலின்போது இமயமலையில் தியானம் செய்த பிரதமர் மோடி, தற்போது குமரியில் 3 நாட்கள் தியானம் செய்துள்ளார்.

இண்டியா கூட்டணிக்கு தோல்வி: காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. அது 100 இடங்களில் கூட வெற்றி பெறாது. அரவிந்த் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றுவிடுவார். இண்டியா கூட்டணியால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.