[X] Close

கைகொடுக்காத பருவமழையால் நீரின்றி வறண்ட பாலாறு: காவிரியிலும் நீர்வரத்து சரிவால் விவசாயிகள் வேதனை


palar-river-dries-up

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 11:56 am
  • அ+ அ-

வடகிழக்கு பருவ மழையின்மையால் காவிரியின் துணை ஆறான பாலாறு வறண்டு சிறு ஓடைபோல மாறியுள்ளது. இதேபோல, காவிரியிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் காவிரி நுழைந்ததும் அதனுடன் சேரும் முதல் துணை ஆறாக இருப்பது பாலாறு. ஈரோடு மாவட்டம் ஈரெட்டியூர் அருகே மலைப்பகுதியில் சிற்றாறாக உருவாகி வழிநெடுக பல நீரோடைகளை தன்னுள் இணைத்துக் கொள்கிறது பாலாறு.

தமிழக- கர்நாடக மாநில எல்லை வழியாக பாய்ந்தோடி வரும் பாலாறு காவிரியை நெருங்கும் சில கிமீ தூரத்துக்கு முன்பாகவே சுமார் அரை கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆறாக விரிந்து பாய்கிறது. காவிரி மற்றும் பாலாறும் சங்கமிக்கும் இடம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான அடிபாலாறு என்று அழைக்கப்படுகிறது.

பாலாற்றின் பாதையில் பல இடங்களில் வனப்பகுதிகளிலும், மலையடிவாரமும் இருப்பதால் ஆண்டுதோறும் கணிசமான அளவு மேட்டூர் அணைக்கு நீர் கிடைத்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பாலாற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

தற்போது, வட கிழக்கு பருவமழை காலம் நீடித்து வரும் நிலையில், போதிய மழையின்றி பாலாற்றில் நீரோட்டம் வெகுவாக குறைந்து, ஆற்றின் பெரும்பகுதி வறண்டு மணலாக காட்சியளிக்கிறது. ஆற்றின் ஓரத்தில் சிறு ஓடை அளவுக்கு மட்டுமே நீர்வரத்து உள்ளது.

இந்நிலையில், காவிரியிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,029 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 15-ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் 99.200 அடியாகவும், நேற்று காலை 98.37 அடியாக குறைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், பாலாறு மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்திருப்பது தமிழக விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close