[X] Close

குலைதள்ளிய வாழைகள் வறட்சி தாக்கத்தால் கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்


farmers-face-loss-over-crops

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 11:54 am
  • அ+ அ-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் வறட்சி தாக்கம் தொடங்கியதால் குலை விட்ட வாழை வயல்களை கால்நடைகளுக்கு தீவனமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலக்கோடு வட்டத்தில் ஆங்காங்கே சிறு சிறு மலைகள் இருப்பதால் அதையொட்டிய விளைநிலங்களில் விவசாயம் செழிப்பாக மேற்கொள்ளப்படும். அதேநேரம், மழைப்பொழிவின் அளவைப் பொறுத்து தருமபுரி மாவட்ட விளைநிலங்கள் எளிதில் வறட்சிக்கு இலக்காகி விடும் நிலையும் உள்ளது.

நடப்பு ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு என இரு பருவ மழைக் காலங்களிலும் போதிய மழை பெய்யவில்லை. சராசரி மழையளவில் 3-ல் ஒரு பங்கு மழை மட்டுமே நடப்பு ஆண்டில் கிடைத்தது. மழைக்கால தொடக்கத்தில் கிடைத்த மழையை நம்பி விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களில் குறுகிய கால மற்றும் நீண்டகால சாகுபடி தன்மை பயிர்கள் பலவற்றையும் நடவு செய்தனர்.

அதில் வாழையும் ஒன்று. பாலக்கோடு வட்டத்தில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, திருமல்வாடி, சீரியம்பட்டி, பெல்லுஅள்ளி, சீங்காடு, கோட்டூர், அமானி மல்லாபுரம், சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு உள்ளிட்ட கிராமங்களில் ஆங்காங்கே வாழை நடவும் மேற்கொள்ளப்பட்டது. மழை குறைவு எதிரொலியாக, இப்பகுதியிலுள்ள சின்னாறு, கேசர்குளி அணைகளிலும் போதிய அளவு நீர் இல்லாமல் போனது.

இதனால், நன்றாக வளர்ந்த வாழை உள்ளிட்ட சில பயிர்களையும் விவசாயிகள் பராமரிக்காமல் விட்டுள்ளனர். பெல்ரம்பட்டி பகுதியில் குலை தள்ளிய வாழைத் தோட்டத்துக்கு பாசனம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை வயலில் கால்நடைகளை மேய விடுகின்றனர்.

இதுகுறித்து மணி என்ற விவசாயி கூறும்போது, ‘நிலங்களில் சாகுபடி செய்த ஏதேனும் ஒரு பயிரை இழந்தால் தான் மற்றொன்றுக்கு பாசனம் மேற்கொள்ள முடியும் என்ற நிலைக்கு உருவாகி வருகிறது. அனைத்தையும் இழக்க மனமில்லாத விவசாயிகள் அதற்கேற்ப முடிவு செய்து ஏதாவது ஒரு பயிரை கவனிக்காமல் விடுகிறோம். சித்திரை பிறப்புக்கு பிறகே இனி மழையை எதிர்பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த 4 மாதங்களில் விவசாயிகளும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். விவசாயிகளின் பாதிப்பை அரசு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்

- எஸ்.ராஜா செல்லம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close