[X] Close

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைகீழாக நடந்து வந்து மனு அளித்த யோகா பயிற்சியாளர்


yoga-instructor-walks-on-hands

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 11:39 am
  • அ+ அ-

விவசாய நிலத்தை அறநிலையத் துறை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகப் புகார் தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைகீழாக கைகளால் நடந்து வந்து யோகா பயிற்சியாளர் மனு அளித்தார்.

கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சத்ரபதி(53). யோகா பயிற்சியாளர். இவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதி நாளின்போது, தலைகீழாக கைகளால் நடந்து வந்தார். பின்னர் அவர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கோவை குனியமுத்தூரில் உள்ள தருமராஜா திரௌபதி அம்மன் கோயிலில், எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து நான்கு தலைமுறைகளாக பரம்பரைப் பூசாரிகளாகப் பணிபுரிகிறோம். இதற்காக எங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 6.53 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதில் நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தோம். இதில் இரண்டு ஏக்கர் நிலத்தை அரசுக்கு சாலை அமைக்க வழங்கியுள்ளோம்.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலையத் துறையினர், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று எழுதப்பட்ட பலகையை எங்கள் நிலத்தில் வைத்தனர். இதனால் நாங்கள் விவசாயம் செய்யமுடியவில்லை. மேலும், எங்களது பரம்பரை பூசாரி உரிமையையும் எவ்விதக் காரணமுமின்றி பறித்துவிட்டனர்.

இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, பூஜை செய்யும் உரிமையைத் திரும்ப வழங்கவேண்டும், மேலும், எங்களது நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு அறநிலையத் துறையினருக்கு அறிவுறுத்தி, நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close