[X] Close

சர்கார் சர்ச்சை; ஏ.ஆர்.முருகதாஸுக்கு நெருக்கடி கொடுப்பதா? உயர் நீதிமன்றம் கண்டனம்


  • முத்தலீப்
  • Posted: 14 Dec, 2018 18:15 pm
  • அ+ அ-

அரசின் திட்டங்களை தீயிட்டு கொழுத்தும் காட்சிகளை வைத்த முருகதாஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென சென்னையை சேர்ந்த செம்பியம் தேவராஜன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஏ.ஆர்.முருகதாஸ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 153 மற்றும் 505 பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் என 5 பிரிவுகளில் கடந்த டிச.10-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், இலவச பொருட்களை கொடுத்து மக்களை சுரண்ட நினைக்கும் அரசியல் கட்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அப்படிப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டன என்றும், ஒரு படம் தணிக்கை வாரியத்தால் சான்று வழங்கப்பட்டது பிறகு பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானதுதான் என முடிவு செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அரசுக்கு எதிராக காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அடிப்படையிலும், அதிமுக-வுனர் நடத்திய போராட்டத்தின் விளைவாகவும் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாதால், தன் மீதான புகாருக்கு முகாந்திரமே இல்லை என்ற நிலை ஆகிவிட்டபிறகு எப்படி வழக்குப்பதிவு செய்தது தவறானது எனவும் மனுவில் கோரப்பட்டது.

பேச்சு சுதந்திரம் என்பது ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான் என்பதையும் முருகதாஸ் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மனு நேற்று விசாராணைக்கு வந்தபோது, நாளை (இன்று) வரை முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர்-ல் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதைய வாதங்கள்.

இலவச பொருட்களை எரிக்கும் காட்சியில் படத்தின் இயக்குனர் முருகதாசே நடித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. படத்தின் காட்சிகளை நீக்க கோரி போராட்டங்கள் நடைபெற்றன. விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திரையரங்குகள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு மக்களுக்கு வழங்கப்படும் திட்டத்தை உள்நோக்குடன் விமர்சித்ததே காரணம்.

தணிக்கை வாரியம் கண்ணை மூடிக்கொண்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. எதிர்ப்புகளின் அடிப்படையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிய சான்று வழங்கப்பட்டுள்ளது. தணிக்கைத் துறை அதிகாரிகளிடமும் விசாரிக்க உள்ளோம் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

படத்தில் ஆட்சேபனைக்குரிய  காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அந்த காட்சிகளை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகளை விசாரிக்க வேண்டியதுதானே? கோடிக்கணக்கானவர்கள் படத்தை பார்த்த நிலையில், தனி நபர்  கொடுத்த புகாரின் பேரில் "மதம், இனம், மொழி சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டியதாக" எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.

சட்டம் ஒழுங்கை காக்கும் காவல்துறையின் வேலை இதுதானா? படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்க்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள். திரைப்படங்களை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும். அரசின் கொள்ககளுக்கு எதிர் கருத்து இருக்க கூடாதா? அரசையோ அல்லது திட்டங்களையோ விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.

ஒரு படைப்பாளியை மன்னிப்பு கேட்க வைப்பதும், உத்தரவாதம் கேட்பதும் அரசின் பலப்பிரயோகத்தை காட்டுகிறது. இந்த காட்சிகளால் மக்களோ, சட்டம் ஒழுங்கோ பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருசில அரசியல்வாதிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது  என நீதிபதி தெரிவித்தார்.

முருகதாஸ் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கூடாது. இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுத்தால் மக்கள் விரும்புகின்ற நலத்திட்டங்கள் மீதான அவதூறு கருத்துக்களை தடுக்க முடியும் என புகார்தாரர் தேவராஜன் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், வழக்கு குறித்து 6 வாரத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க வேண்டும், மேலும், முருதாஸ் தொடர்ந்துள்ள வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை அவர் மீதான எப்.ஐ.ஆர்-ல் நடவடிக்கை எடுக்க தடை என உத்தரவிட்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close