புதுவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு 1,002 ஊழியர்கள்!


பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 1,002 ஊழியர்கள் ஈடுபடுவதாகவும் வாக்கு எண்ணும் நாளில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தெரிவித்தார்.

புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பில் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுவை பிராந்தியத்தில் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் மகளிர் பொறியியல் கல்லுாரியிலும், காரைக்காலில் அண்ணா அரசு கலை கல்லுாரியிலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளியிலும், ஏனாமில் எஸ்ஆர்கே அரசு கலைக்கல்லூரியிலும் 12 துணை தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்.

புதுவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு பொதுப்பார்வையாளர், கூடுதலாக 12 பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. புதுவை மாநிலத்தின் 4 பிராந்திய வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 1,002 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் எந்த இடத்தில் பணிபுரிவார்கள் என்பதை 4-ம் தேதி காலையில் தான் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காலை 6.30 மணிக்கு பாதுகாப்பு அறையில் இருந்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும். முதலில் தபால் வாக்குககள் எண்ணப்படும். இதற்காக புதுவையில் 4 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கைக்கு 8 அறைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் மொத்தம் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கும். புதுவையில் 93 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரே நேரத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணப்படும்.

ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய 3 மணி நேரம் ஆக வாய்ப்புள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதன்பிறகு விவிபேட் எண்ணிக்கைக்கு பிறகே அதிகாரபூர்வமாக முடிவுகளை அறிவிப்போம். மாலை 6 முதல் 7க்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும். அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளது. முகவர்களின் தகவல் பெறப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றுவர அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையின்றி எந்த முகவரும் அனுமதிக்கப்படமாட்டார். முகவர்கள் பேனா, காகிதம், அடையாள அட்டை தவிர வேறு பொருட்கள் எடுத்துவர அனுமதியில்லை.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கண்டிப்பாக முகவர்கள் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களை ஒட்டியுள்ள சாலையில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டமிட்டுள்ளோம். வாக்கு எண்ணப்படும் நாளில் அனைத்து மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்படும்.'' இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்எஸ்பி நாரசைதன்யா கூறுகையில், ''வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புப் போடப்படும். முதலில் மாநில போலீஸாரும். இரண்டாவதாக ஆயுதப்படையினரும் மூன்றாவதாக மத்திய பாதுகாப்புப் படையினரும் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அடையாள அட்டை உள்ளவர்கள் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவர். செல்போன், லேப்டாப் போன்ற கருவிகள் அனுமதிக்கப்படாது. வெற்றி ஊர்வலங்களை பொதுமக்கள், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடத்த அனுமதியளிப்போம்'' என்றார்.