இன்னொரு மூளை- ஏ.ஆர்.முருகேசன்


மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது. வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டதிலிருந்தே எதையோ இழந்ததைப் போலிருந்தது. அதற்கு என்ன காரணம் என்பது தெரிந்தாலும், அதைப் பற்றி நினைக்காதே என மனம் உறுதியேற்றுக்கொண்டிருந்தது.

பைக்கை நிறுத்தி அலுவலகத்துக்குள் நுழையும்போது எதிர்பட்ட பார்சல் பிரிவு பாண்டியன் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே, “வணக்கம்” என்று சொன்னான். உண்மையில் அவன் விசித்திரமாகத்தான் பார்த்தானா, என் மனநிலைதான் காரணமா என்ற குழப்பம் நீடித்தது. சட்டென வலதுகை, கனமற்றுத் தொளதொளத்திருந்த சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்தது. பைக்கில் வரும்போது இதுபோல் எத்தனை முறை தொட்டுப்பார்த்துத் திடுக்கிட்டு சமாதானம் செய்துகொண்டிருப்பேன்!

அலுவலக ஊழியர்களின் புன்சிரிப்பை ஏற்று இருக்கையை ஆக்ரமிக்கும் வரை கூட அனைவரிடமும் அதே விசித்திரப் பார்வை.

புன்னகையுடன் நெருங்கிய தர்ஷிணி, “செல் நம்பர் புதுசு வாங்கிட்டேன். பழசு கிடைக்கல. உங்க நம்பர் சொல்லுங்க” என்றாள். சொன்னேன். அகலமான திரையைத் தொட்டு டயல் செய்து பச்சையைத் தேய்த்தாள். ரிங் டோன் கேட்காததால், ‘ஒண்ணும் கேக்கலயே’ என்பதுபோல் பார்த்தாள்.

x