[X] Close

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்; யூனியன் பிரதேசம் மத்திய அரசின் ‘சொத்து’- உச்ச நீதிமன்றம் உத்தரவு


puduchery-bjp-mlaac

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 18:13 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேரை எம்எல்ஏக்களாக நியமனம் செய்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அவர்கள் நியமனத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசு ‘சொத்து’ என்ற வாதத்தை ஏற்பதாக தெரிவித்தது.

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு நியமனம் செய்த பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடினர். நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி உத்தரவிட்டது.

பேரவைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும், தன்னிடம் கருத்துகேட்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என மார்ச் 25-ம் தேதி மறுத்து உத்தரவிட்டார்.

மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இடைக்கால நிதிநிலைக் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் வர தடை விதித்து வைத்திலிங்கம் உத்தரவிட்டார். நியமன எம்எல்ஏக்கள் போராடியும் பேரவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான லட்சுமிநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஏ.கே சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

முன்னதாக இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும்  எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும்,நியமனம் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வாதங்கள் நடந்தன. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி ‘‘புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்றும், அது மத்திய அரசின் ‘சொத்து’ என்பதால் எங்கு மத்திய அரசின் அதிகாரம் அங்கு செல்லுபடியாகும் எனவும் கூறினார்.

முன்னதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அரசியல் சட்டம் மத்திய அரசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கவில்லை என்றார். இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் வாதத்தை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,  சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என அறிவித்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close