[X] Close

ஏற்காட்டில் பகலில் நடுங்க வைக்கும் குளிர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


yercaud-temparature-dips

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 10:56 am
  • அ+ அ-

ஏற்காட்டில் பகலிலேயே கடுமையான குளிர் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்வது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் குளிர் காலம் தொடங்கி பிப்ரவரி வரையிலும் நீடித்திருக்கும். இந்த காலத்தில் சமவெளிப் பகுதிகளிலேயே குளிர் அதிகமாக காணப்படும். அதே வேளையில் மலைப்பிரதேசங்களில் மிக அதிக குளிர் நிலவும். இந்நிலையில், ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் தற்போது பகலிலேயே குளிர் அதிகரித்து காணப்படுகிறது. சேலத்தில் இருந்து 32 கிமீ தொலைவில் சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 4,970 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு குளிர்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் மிதமான வெப்பம் நிலவுகிறது. டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் ஏற்காட்டில் குளிர் அதிகமாக இருக்கும். தற்போது டிசம்பர் மாதம் தொடங்கி விட்டநிலையில், ஏற்காட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் சராசரியாக 25 முதல் 28 டிகிரி வெப்பமும், இரவில் 22 டிகிரிக்கு குறைவாகவும் இருக்கிறது. சில நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து அதிக குளிர் நிலவி வருகிறது.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பகல் 11 மணி வரையிலும் கடும் பனி மூட்டமும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று பகலிலும் பனிமூட்டமும் அதைத் தொடர்ந்து சாரல் மழையும் பெய்ததால் மக்கள் இயல்பாக நடமாட முடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவியது. இதனால், மக்கள் அனைவரும் ஸ்வெட்டர் அணிந்தபடியே நடமாடினர்.

இதனிடையே, ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் திடீரென பெய்த சாரல் மழையையும் அதன் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் குளிரையும் பரவசத்துடன் அனுபவித்தனர். எனினும், குளிர் மற்றும் மழை காரணமாக, ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், படகுத்துறை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், மான் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close