[X] Close

தி.மலையில் கந்து வட்டி கொடுமையால் காவல் நிலையம் முன்பு தம்பதி தற்கொலை முயற்சி: காவல் துறையினர் விசாரணை


couple-tries-to-commit-suicide

காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி.

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 12:39 pm
  • அ+ அ-

தி.மலையில் கந்து வட்டி கொடுமையால் காவல் நிலையம் முன்பு தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தி.மலை அடுத்த சம்மந்த னூர் கிராமத்தில் வசிப்பவர் ராஜீவ்காந்தி. இவர், திருவண்ணா மலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று தனது மனைவி தீபா மற்றும் கைக்குழந்தையுடன், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கு வந்தார். திடீரென அவர் தன்மீதும், மனைவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, “ திருவண்ணாமலை அஜீஸ் நகரில் வசிக்கும் காவல் துறையில் பணியாற்றும் ஒருவரிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் பெற்றேன். இதற்காக, ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வட்டி செலுத்தி வருகிறேன். இந்நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பணத்தை திரட்ட முடியவில்லை.

அதனால் அவரிடம் கால அவகாசம் கேட்டேன். அதனை ஏற்க மறுத்த அவர், அடியாட்களுடன் வந்து, கடந்த மாதம் 24-ம் தேதி எனது இரு சக்கரம் பழுது பார்க்கும் கடையை பூட்டினார். அப்போது என்னை, அபாசமான வார்த்தைகளால் திட்டினார். எனது வீட்டுக்கு வந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுவதால் அவரை எதிர்க்க பயமாக உள்ளது. இதனால், எனக்கு வேறு வழி இல்லாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவை எடுத்தேன்” என்றார்.

கந்து வட்டி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தலைமை காவலர் மீதே, கந்து வட்டி புகார் எழுந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close