[X] Close

ஆம்பூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சாமர்த்தியமாக செயல்பட்டு 3 பேரை மீட்ட போலீஸார்


car-trips-over-into-60-foot-well

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட கார்.

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 12:28 pm
  • அ+ அ-

ஆம்பூர் அருகே 60 அடி ஆழ தரைக்கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

சென்னை பட்டாபிராம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (35). கிராபிக்ஸ் டிசைனராக வேலை செய்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான 2.0 திரைப்படத்தில் கிராபிக்ஸ் டிசைன் குழுவில் சுந்தரமூர்த்தி பணியாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுந்தரமூர்த்தி தனது மனைவி மாயா (29), மகள் கீர்த்தி (3) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். காரை சுந்தரமூர்த்தியே ஓட்டி வந்தார்.

வேலூர் மாவட்டம் மின்னூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள மரத்தில் மோதியது.

பின்னர், இடது புறமாக திரும்பி தறிக்கெட்டு ஓடிய கார் அங்குள்ள 60 அடி ஆழ தரைக்கிணற்றில் கவிழ்ந்தது. அதிகாலை 3.50 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விபத்து நடந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை. இருப்பினும், கிணற்றில் கவிழந்த கார் அங்கிருந்து மரக்கிளையில் சிக்கி தலைகீழாக தொங்கியது.

இதையறிந்த சுந்தரமூர்த்தியும், மாயாவும் உதவிக்கு ஆட்க ளை அழைத்தனர். அதில், பலன் ஏற்படாததால் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்ஸ்க்கு சுந்தரமூர்த்தி காரில் தொங்கியபடியே தகவல் தெரிவித்தார். ஆம்பூர் அருகே கார் விபத்துக்குள்ளானதும், அது எந்த இடம் என தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஊயர்கள் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தாலுகா காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட போலீஸார், தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்பூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய காரை தேடினர்.

சுமார் 1 மணி நேரம் தேடியும் கார் இருக்கும் இடம் தெரியவில்லை. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை உதவியுடன் சுந்தரமூர்த்தியின் செல்போன் ஜிபிஆர்எஸ் மூலம் மின்னூர் கிணற்றில் கார் சிக்கியிருப்பதை போலீஸார் தெரிந்து கொண்டனர்.

உடனே, அங்கு சென்ற போலீஸார் விபத்தில் சிக்கி உயிரிக்கு போராடிய சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மாயா, மகள் கீர்த்தி ஆகியோரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 3 பேரும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் கிணற்றில் அந்தரத்தில் தொங்கிய காரை போலீஸார் மீட்டனர்.

விபத்தில் சிக்கிய 3 பேரை போலீஸார் சாமார்த்தியமாக மீட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close