[X] Close

சிகரெட்டில் 7 ஆயிரம் வகை நச்சுப் பொருட்கள் : புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் 


ill-effects-of-cigarette-explained

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 13:34 pm
  • அ+ அ-

சிகரெட்டில் 7 ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன என்று, புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சார்லி அறக்கட்டளை சார்பில் புற்றுநோயைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் கே.ராஜகோபால் தொடங்கிவைத்தார். ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஆர்.பொன்ராஜ் வரவேற்று பேசினார். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் பிரேம்குமார் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நெல்லை டாக்டர் முகம்மது இப்ராகிம் பேசியதாவது:

நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்களுக்கும் ஒவ்வொரு வேலை உள்ளது. எல்லா செல்களும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே உயிர் வாழும். அதன் பிறகு அது இறந்துவிடும். இறந்துவிட்ட செல்களின் இடத்தை நிரப்ப புதிதாக செல்கள் உற்பத்தியாகும். இதில் சிறு தவறு ஏற்படும்போது புற்றுநோய் ஏற்படுகிறது. இது உடலுக்குள் ஏற்படும் மாற்றம். ஆனால், புற்றுநோய் ஏற்படக் காரணம் வெளியே உள்ளது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. நகம், முடி, பல் தவிர மற்ற எல்லா உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படலாம்.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் இரைப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில் பெண்களுக்கு கர்பப்பை வாய் புற்றுநோயும், நகர்ப்புறங்களில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் அதிகமாக காணப்படுகிறது.

வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறது. இதைத் தவிர கல்லீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு வகை புற்றுநோய்க்கும் அறிகுறிகள் மாறுபடும். ஏதாவது ஓர் உறுப்பில் புற்றுநோய் வந்தால் அந்த உறுப்பு மட்டுமின்றி மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.

புற்றுநோய் வர முக்கியமான காரணம் புகையிலை. 35 முதல் 40 சதவீத புற்றுநோய்கள் மது மற்றும் புகைப் பழக்கத்தால் வருகிறது. எனவே, மது, புகைப் பழக்கத்தைத் தவிர்த்தால் புற்றுநோய் பாதிப்பை பாதியாகக் குறைக்கலாம். அதற்கு அடுத்தபடியாக உடல் பருமனால் புற்றுநோய் ஏற்படுகிறது. உடலுழைப்பு குறைந்ததால் உடல் பருமன் அதிகரிக்கிறது. எனவே, உடலை பாதுகாக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கிருமி தொற்று, கதிர்வீச்சு போன்ற காரணங்களாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். வைஃபை, செல்போன் போன்றவற்றின் கதிர்வீச்சுகளும் அபாயமானதே. தேவையற்ற நேரங்களில் செல்போன், வைஃபை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கதிர்வீச்சு மூலம் இயங்குவதால் புளூ டூத் பயன்படுத்துவதும் ஆபாயமானதே.

இதேபோல், தேவையின்றி நானோகிராம் எடுக்கக் கூடாது. ஒரு முறை நானோகிராம் எடுத்தால் 3 ஆண்டுகளுக்கு நானோகிராம் எடுக்கக் கூடாது. டாக்டர் பரிந்துரையின்றி நானோகிராம் எடுக்கக் கூடாது. மேலும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் நானோகிராம் எடுக்கக் கூடாது.

கடையில் சென்று துணி வாங்குவதுபோல் சிடி ஸ்கேன் எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை சிடி ஸ்கேன் எடுப்பது 5 ஆயிரம் எக்ஸ்ரே எடுப்பதற்குச் சமம். தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பதும் அதன் கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் காரணமாக செல்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதாலும் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும். சுற்றுச் சூழல் பாதிப்பும் புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ளது. உணவுப் பொருட்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் பவுடர்களாலும் புற்றுநோய் ஏற்படும்.

பெரும்பாலான புற்றுநோய்களுக்கு சிகரெட் காரணமாக உள்ளது. சிகரெட்டில் 7 ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. சிகரெட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பது தெரியாமல் ஊதித் தள்ளுகிறோம்.

சிகரெட் புகைக்கும் பழக்கம் 1900வது ஆண்டில் மேலை நாடுகளில் அறிமுகமானது. இந்த பழக்கத்தால் 1920களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிக்கத் தொடங்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் ராஜா எஸ்.விக்கேஷ், டாக்டர் வி.பிரேமசுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் வையாலி முத்தையா, ஜிம்மி கார்டன், தட்சிணாமூர்த்தி, எஸ்.டி.ஆர்.காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close