[X] Close

2,190 கிலோ கெட்டுப்போன இறைச்சியை ரயிலில் கொண்டு வந்த விவகாரம்: 5 பேர் கைது; ரயில்வே போலீஸ் நடவடிக்கை


rajasthan-meat-issue

ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட 2190 கிலோ கெட்டுப்போன இறைச்சி- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 22:08 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் ஜோத்பூரிலிருந்து கெட்டுப்போன 2,190 கிலோ இறைச்சியை ரயில் மூலம் கொண்டு வந்த விவகாரத்தில் 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 17-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 21 பார்சல்களில் பதப்படுத்தப்படாத கெட்டுப்போன இறைச்சி 2,190 கிலோ பார்சல் மூலம் வந்தது. மீன் என்று புக் செய்யப்பட்டு வந்த அந்த தெர்மோகோல் பெட்டிக்குள் ஆட்டிறைச்சி இருந்தது.

இறைச்சியின் தன்மை, எலும்புகள் மற்றும் வாலின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் அது ஆட்டிறைச்சியா? நாய் இறைச்சியா? என்பதை அறிய கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் நான்கு நாட்களாக உரிய குளிரூட்டப்படாமல் வந்ததால் இறைச்சி கெட்டுப்போனதாக தெரிவித்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் பிரியாணி வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் வந்து அது ஆட்டிறைச்சிதான் என்று பேட்டி அளித்தனர். அது ஒருவகையான நீள வாலுடைய ஆடு எனத் தெரிவித்தனர். பின்னர் ஆய்வில் அது ஆட்டிறைச்சிதான் என்பது நிரூபணமானது.

ஆனால் பெறுநர் முகவரி ஏன் இல்லை, மீன் என்று ஏன் எழுதி பார்சல் புக் செய்யப்பட்டுள்ளது ஏன் என்கிற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து மீன் எனக் குறிப்பிட்டு 2,190 கிலோ இறைச்சியை அனுப்பியது யார்? அதற்கு பெறுநர் விலாசம் ஏன் இல்லை, என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்குச் சென்றது.

ஆனாலும், பார்சலை மீன் என புக் செய்த புக்கிங் ஏஜெண்ட் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர், ஜெய்கணேஷ் (எ) கறி கணேஷ் மற்றும் உஸ்மான் பாஷா ஆகியோரைக் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்ற ரயில்வே போலீஸார் ஜோத்பூரைச் சேர்ந்த ஏஜெண்ட் இம்ரான், குஜராத் மாநிலம் கிராந்திதாம் என்ற பகுதியைச் சேர்ந்த முன்னாகுரேஷி ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்.

கெட்டுப்போன இறைச்சி விவகாரத்தில் இவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புச் சட்டம் 1989-ன் கீழ் பிரிவு 163, 165 மற்றும் 145 பி-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஜோத்பூர் மற்றும் குஜராத் மாநிலம் கிராந்திதாம் பகுதியைச் சேர்ந்த 4 ரயில்வே ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள இறைச்சி இறக்குமதி செய்யும் ஆட்களும் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close