[X] Close

நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இப்போது புழுத்துப் போன அரிசியுடன்..! டெல்டா ஆய்வுக்குப் பின் கமல் வேதனை


kamal-delta-gaja

கமல்ஹாசன்

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 22:25 pm
  • அ+ அ-

நமக்கு நல்ல சோறு போட்டவர்கள், முகாம்களில் புழுத்துப் போன அரிசியுடன் இருக்கிறார்கள் என்று கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், வேதனையுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மிகுந்த வேதனையுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையை வெளியிட்டுப் பதிவிட்டுள்ளார்.

மொத்தம் ஆறு பதிவுகளாகப் பதிவிட்டுள்ளார்.

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு" போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அடுத்த ட்விட்டில் கமல் பதிவிட்டிருப்பதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”.

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.  #MNMForDelta

இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close