[X] Close

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தடையை மீறி அபாய பாறைகளில் உலா வரும் சுற்றுலா பயணிகள்: நீராடும் பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் ஆபத்து


kanniyakumar-tourists-violate-laws

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் பாறைகளின் மேல் நின்று செல்பி எடுக்கும் இளைஞர்கள். படம்: எல்.மோகன்.

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 12:33 pm
  • அ+ அ-

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள அபாய பாறை களில் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் உலா வருகின்றனர். கடலில் நீராடும் பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

கன்னியாகுமரிக்கு ஆண்டு தோறும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கோடை விடுமுறை, சபரிமலை சீஸன், ஆடி அமாவாசை, தை அமாவாசை காலங்களில் அதிகமானோர் திரள்வர்.

தற்போது சபரிமலை சீஸன் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது. பகவதியம்மன் கோயில், படகு இல்லம், கடற்கரை சாலை, காந்தி மண்டபம், முக்கடல் சங்கமம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், குளியலறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முக்கடல் சங்கமத்தில் ஆபத்தான பகுதிகளை குறிக்கும் வகையில், கடலுக்குள் மிதவைகள் மிதக்கவிடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றைத் தாண்டிச் சென்று சுற்றுலா பயணிகள் குளிப்பதும், கடலுக்குள் இருக்கும் அபாய பாறைகளில் உலா வருவதும், அங்கு நின்று செல்பி எடுத்துக் கொள்வதும் தொடர்கிறது.

முக்கடல் சங்கமம் பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் இவற்றை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாததால் விவரம் அறியாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் அபாயத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, அபாய பாறைகளில் சென்று ஆர்வ மிகுதியால் செல்பி எடுக்கும் இளைஞர்கள், சிறுவர்களை கட்டுப்படுத்தவும், கடல் அலைகளில் சிக்காதவாறு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா ஆர்வலர்கள் கூறும் போது, ``முக்கடல் சங்கமத் தில் நீராடும் வெளியூர் பயணிகளுக்கு அப்பகுதியில் உள்ள அபாயங்கள் குறித்து தெரியாது. அதுமட்டுமின்றி ஆபத் தான பாறைகளில் நின்று கடல் அழகை ரசிப்பதும், குளிப்பதும் தொடர்கிறது. காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தின் பின்புறம் உள்ள தடை செய்யப் பட்ட கடல் பகுதியிலும் பலர் நீராடுகின்றனர். எனவே, உரிய பாதுகாப்பும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

- எல்.மோகன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close