[X] Close

தி. மலை தீபத் திருவிழாவில் விஐபிக்களின் வாகனங்கள் செல்வதற்காக பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை: சின்னக்கடை வீதியில் கடும் நெரிசல் 


police-pave-way-for-vips-affecting-public

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 12:52 pm
  • அ+ அ-

தி.மலையில் விஐபிக்களின் வாகனங்கள் செல்வதற்காக கிரிவலம் சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தடுத்து நிறுத்தப் பட்டதால், சின்னக்கடை வீதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் சன்னதி முன்பு தங்கக்கொடி மரம் எதிரே உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் நேற்று மாலை காட்சிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை காண விஐபிக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்களது வாகனங்கள் அனைத்தும், பெரியத் தெரு வழியாக அனுமதிக்கப்பட்டு, அம்மணி அம்மன் கோபுரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. 

மகா தீபம் ஏற்றப்பட்டதும், விஐபிக்கள் அனைவரும் அண்ணாமலையார் கோயிலில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறினர். பின்னர் அவர்கள், தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு பெரியத் தெரு வழியாக, தங்களது ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்களது வாகனங்களுக்கு தடை ஏற்படாத வகையில், மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் மிக துரிதமாக செயல்பட்டனர். 

இதற்காக, சின்னக்கடை வீதி வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கு 1 முறை அடிக்கடி தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், பக்தர்கள் விஐபி வாகனங்கள் சென்ற பெரியத் தெருவை கடந்து, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு வழியாக ராஜகோபுரத்தை சென்றடைவார்கள். இதனால், சின்னக்கடை வீதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். 

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் மகா தீபம் ஏற்றிய பிறகு, விஐபிக்களின் வாகனங்கள் செல்வதற்காக, எங்களை தடுத்து நிறுத்துகின்றனர். சின்னக் கடை வீதியானது மிகவும் குறுகலான வீதியாகும். இதனால், பக்தர்கள் அனைவரும் கடுமையான நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். விஐபிக்கள் வாகனம் முழுமையாக சென்ற பிறகுதான், எங்களை அனுமதிக்கின்றனர். 

கார்த்திகை தீபத் திருவிழா என்பது பக்தர்களுக்கு என்று இல்லாமல், அதிகார வர்க்கத்தின் விழாவாகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். பக்தர்களின் வேதனையை அவர்கள் உணரவில்லை. ஒவ்வொரு விஐபிக்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் அபாய ஒலி(சைரன்) எழுப்பப்பட்ட வாகனம் செல்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மாட வீதியில் விஐபிக்களின் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close