[X] Close

உயர் நீதிமன்றம் நியமித்துள்ள நீர்நிலை மீட்புக்குழுவிடம் மூல ஆவணங்களை மறைக்கும் அதிகாரிகள்: ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்வதில் தாமதம்


officials-hide-records-on-water-resources

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 12:49 pm
  • அ+ அ-

ஆக்கிரமிப்புகளின் பிடியிலிருந்து நீர் நிலைகளை மீட்பதற்காக உயர் நீதி மன்றம் அமைத்துள்ள மீட்புக்குழுவிடம் நீர்நி லைகளின் மூல ஆவணங்களை வழங்காமல் அதிகாரிகள் மறைத்து வருவதால் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் தண்ணீரை தேக்க முடியாத நிலை இருப்பது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது.

இந்தச் செய்தி அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் நிலைகள், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக கதர் வாரியத் தலைவர், ஐஏஎஸ் அதிகாரி நடராஜன் தலைமையில் பொறியாளர் ஏ.சி.காமராஜ், அரசு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன், வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, பி.சரவணன், 5 மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட நீர்நிலை மீட்புக்குழுவை அமைத்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, மதுரை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள வண்டியூர் கண்மாயில் எந்த ஆக்கிரமிப்பும் இல்லை. சிறிய அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அதுவும் அகற்றப்பட்டுவிட்டது என வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வண்டியூர் கண்மாயில் ஆய்வு செய்ய மீட்புக்குழு முடிவு செய்தது.

இந்த ஆய்வின்போது வண்டியூர் கண்மாய் தொடர்பான அனைத்து மூல ஆவணங்களையும் எடுத்து வருமாறு வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளை மீட்புக்குழு கேட்டுக் கொண்டது. முதல் ஆய்வின்போது மூல ஆவணங்களை அதிகாரிகள் அளிக்க வில்லை.

சமீபத்திய ஆவணங்களை மட்டுமே அளித்துள்ளனர். இரு துறையினரும் அளித்த ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, வண்டியூர் கண்மாய் நிலப்பரப்பில் பெரிய அளவில் வேறுபாடு இருந்தது தெரியவந்தது. பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் வண்டியூர் கண்மாய் நிலப்பரப்பில் குறிப்பிடப்படவில்லை. அந்த ஆக்கிரமிப்புகள் பட்டா நிலம் போல் காட்டப்பட்டிருந்தன. மூல ஆவணங்களை மீட்புக்குழு கேட்டபோது, அந்த ஆவணங்கள் சென்னையில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் சமாளித்துள்ளனர். அடுத்த ஆய்வின்போது தருவதாகவும் தெரிவித்தனர். ஆனால், 2-வது முறை நடந்த ஆய்வின்போதும் மூல ஆவணங்களை அதிகாரிகள் தரவில்லை. தற்போது நவீன முறையில் நில அளவீட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பக் கருவிகளையும் அதிகாரிகள் கொண்டுவரவில்லை. இதனால் மீட்புக்குழு அதிருப்தி தெரிவித்தது.

கைவசம் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அளவீடு செய்தபோது, முதல் அளவீட்டிலேயே தனியார் ஒருவர் வண்டியூர் கண்மாய் நிலத்தில் 171 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து சொந்த நிலம் போல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள ஆய்வி ன்போது வண்டியூர் கண்மாயின் மூல ஆவணங்களையும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இயங்கும் நில அளவீட்டு கருவிகளையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலருக்கு மீட்புக்குழு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளது. நீர்நிலைகளின் மூல ஆவணங்களை தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பது தொடர்பாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் மீட்புக்குழு முடிவு செய்துள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் கூறுகை யில், "நீர் நிலைகள் தொடர்பான 2006-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ள ஆவணங்களை மட்டுமே அதிகாரிகள் தருகின்றனர்.

அதற்கு முந்தைய ஆவணங்களின் அடிப்படையில் அளவீடு செய்தால்தான் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து தெரியவரும். நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதை மறைப்பதற்காக ஆக்கிரமிப்பு பகுதியை தவிர்த்துவிட்டு நீர்நிலையின் பரப்பளவு தொடர்பான ஆவணங்களை மட்டுமே அதிகாரிகள் தருகின்றனர்" என்றார்.

- கி.மகாராஜன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close