கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்: இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது


கொடைக்கானல்: கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் பிரையன்ட் பூங்காவின் நுழைவுக்கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

கொடைக்கானலில் தமிழக அரசின் சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா, சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைஇயக்குநர் குமாரவேல் பாண்டியன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்பூங்கொடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வரும் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

கண்காட்சி நடக்கும் பிரையன்ட்பூங்கா நுழைவுக் கட்டணம் 10 நாட்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு (வயது 3 -10) ரூ.35-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சாதாரண நாட்களில் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நுழைவுக் கட்டணம் இரு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக, சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோடை விழாவையொட்டி கொடைக்கானலுக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸார்வரவழைக்கப்பட்டு உள்ளனர்.