[X] Close

தென்னை, மா, பலா மரங்கள் முழுவதும் நாசமானதால் விவசாயிகள் விரக்தி


gaja-cyclone-wreaks-havoc

கறம்பக்குடியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் முறிந்து கிடக்கும் தென்னை மரங்கள்.

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 11:24 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நிரந்தர வருவாய் ஆதாரமாக விளங்கி வந்த பணப்பயிர்களான தென்னை, மா மற்றும் பலா மரங்கள், புயலில் முறிந்ததால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகாக்களைத் தவிர ஏனைய 9 தாலுகாக்களிலும் ஆழ்துளைக் கிணறு, குளம், ஏரி தண்ணீரைக் கொண்டுதான் பாசனம் செய்யப்படுகிறது. இதில், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், மேற்பனைக்காடு, கருக்காகுறிச்சி, மழையூர், கந்தர்வக்கோட்டை, நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் பலா மரங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் தோப்புகளாக பராமரிக்கப்பட்டன.

இங்கு விளையும் பழங்கள் அதிக ருசியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும். இதேபோன்று, 25 ஆயிரம் ஏக்கரில் தென்னையும், 1,000 ஏக்கரில் மா மரங்களும் இருந்தன. தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதோடு உற்பத்தித் திறனும் அதிகமாக இருப்பதால் இங்கு ‘நீரா’ பானம் எடுப்பதற்கும் அரசு அனுமதி அளித்தது. வாழை, கரும்பு பயிர்களைப்போன்று அல்லாமல் நீடித்த வருமானத்தைத் தரக்கூடியதாக இம்மரங்கள் இருந்தன. இதனால் இப்பகுதி யானது மரம் வளர்ப்பில் முன்னோடியாக காணப்பட்டது.

மேலும், இந்த மரங்களில் 500 ஏக்கரில் மிளகுக் கொடிகளை படரவிட்டு மிளகு சாகுபடியும் செய்யப்பட்டது. வறட்சியான பகுதியாக கருதக்கூடிய இப்பகுதியானது மரங்களால் சோலையாகவும், குளிர் பிரதேசத்தில் மட்டுமே சாத்தியம் எனக் கருதப்பட்டு வந்த மிளகு இங்கு விளைந்தது இப்பகுதியின் சிறப்பாக இருந்தது.

ஆனால், சில மணி நேரம் சுழற்றிய கஜா புயலின் கோரத் தாக்குதலுக்கு அனைத்து மரங்களும் முறிந்து தோட்டத்தில் பாய்விரித்ததுபோல காணப்படுகின்றன. இதனால் வாழ் வாதாரத்தையும் இழந்து, உடமை களையும் இழந்து இப்பகுதியி னர் நிர்க்கதியாகித் தவிக்கின்றனர்.

மற்ற மரங்களுக்கு வழங்குவதைப் போன்று இத்தகைய மரங்களையும் கணக்கில் கொள்ளாமல் தென்னை, பலா, மா மரங்களுக்கு கூடுதலான தொகையை நிர்ணயித்து நிவாரணத் தொகையை அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கொத்தமங்கலம் விவசாயி துரைராஜ் கூறியது: வாழை, நெல், சோளம் போன்ற பயிர்களைப்போன்று குறிப்பிட்ட பருவத்துக்கு ஏற்ற பயிர்களைவிட தென்னை, மா, பலா மரங்கள் நிரந்தரமான வருமானத்தைக் கொடுத்து வந்தன. 25 ஆயிரம் ஏக்கரில் இருந்த சுமார் 15 லட்சம் தென்னை மரங்களும், 10 ஆயிரம் ஏக்கரில் இருந்த பலா மரங்கள், 1,000 ஏக்கரில் இருந்த மா மரங்கள் அடியோடு நாசமாகி உள்ளன. முறிந்து சின்னாபின்னமாக கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றவே பல லட்சம் ரூபாய் தேவைப்படும். அதற்கும் பல நாட்களாகும்.

நெல், சோளம், கடலை போன்ற பயிர்கள் அழிந்தால்கூட மீண்டும் அந்த இடத்தில் உடனே சாகுபடி செய்துவிடலாம். ஆனால், இங்கு மீண்டும் அதே இடத்தில் மரங்களை வளர்த்தெடுக்க குறைந்தது 5 ஆண்டுகளாகும். குடும்பமே உழைத்து குழந்தைகளை வளர்ப் பதுபோன்று வளர்த்தெடுக்கப் பட்ட மரங்கள் கண் முன்னே வீழ்ந்து கிடப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த தொகையை நம்பியே மொய் வரவு செலவை நடத்தி வந்தோம். விவசாயக் கடனை யும் பெற்றுள்ளோம். ஆனால், குடியிருந்த வீட்டையும் இழந்து, வரு மானத்தையும் இழந்து நிர்க்கதியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மரத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் அளித்தால்தான் விவசாயிகள் மீள முடியும். இல்லையேல், விவசாய தொழிலையே விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவிடலாம் என்று கண்ணீர்மல்க கூறினார்.

 - கே.சுரேஷ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close