ராமநாதபுரத்தில் 38,756 மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரண நிதி வழங்கல்


ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 38,756 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால வழங்கப்படுகிறது.

தமிழக கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை ஆகிய தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையை தமிழக அரசு தடைக்காலம் முடிந்ததும் தான் வழங்கி வந்தது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை சென்னையில் மீன்வளம், மீனவர் நலத் துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலத்தில், தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.90 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரம் வீதம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி துவங்கி வைத்தார்.

இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 756 மீனவ குடும்பங்களுக்கு நடப்பு ஆண்டில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இது மீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம், ரூ.1,500, ரூ.1,500 என மூன்று தவணைகளில் வரவு வைக்கப்படும், என மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x