அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் ஊட்டியில் காலமானார்


டாக்டர் எம்.ஆர்.னிவாசன்

ஊட்டி: இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், அணுசக்தித் துறை முன்னாள் செயலாளருமான டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்(95) ஊட்டியில் காலமானார்.

டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955-ல் அணுசக்தித் துறையில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியைத் தொடங்கினார்.

ஆகஸ்ட் 1959-ல் இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்துக்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். 1967-ல் சென்னை அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றபோது, அவரது தலைமையிலான குழு நாட்டின் அணுசக்தி திட்டத்தை வடிவமைத்தது.

டாக்டர் ஸ்ரீனிவாசன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கியப் பதவிகளை வகித்தார். 1974-ல் அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநர், 1984-ல் அணுசக்தி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் உள்ள அனைத்து அணுசக்தி திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை அவர் மேற்பார்வையிட்டார்.

1987-ல், அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தி துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் இந்திய அணுசக்தி கழகத்தின் நிறுவனர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன.

இந்திய அணுசக்தி திட்டத்துக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது டாக்டர் ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. ஓய்வுக்குப் பின்னர் ஊட்டியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த ஸ்ரீனிவாசன், வயது மூப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், "இந்திய அணு ஆற்றல் திட்டத்தின் தூணாக விளங்கிய முனைவர் ஸ்ரீனிவாசன் மறைவை அறிந்து வருந்துகிறேன். அணு ஆற்றல் அலகுகளைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த ஸ்ரீனிவாசன், நாட்டின் அணு ஆற்றல் தன்னிறைவுக்கு வழிவகுத்தவர். தேசத்தின் வளர்ச்சிக்காக உண்மையாகப் பாடுபட்ட அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

x