இடஒதுக்கீட்டால் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசமைப்பு சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. 1971 முதல் இந்தியாவில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் குறித்தும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகங்கள் முன்னேறவே இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் அதனால் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஏற்பட்ட பயன்கள் ஆகியவை குறித்து எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்த அளவுக்கு பங்களித்தன என்பது குறித்தும் இக்குழு ஆராய வேண்டும்.

அதற்கு வசதியாக 1971 முதல் 1980 வரை நடைமுறையில் இருந்த 49 சதவீத இடஒதுக்கீடு, 1980 முதல் 1989 வரை நடைமுறையில் இருந்த 68 சதவீத இடஒதுக்கீடு, 1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு உருவாக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது முதல் இப்போதுள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வரை ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை குழுவிடம் வழங்கி ஆய்வுக்கு உட்படுத்துமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x